Monday 8 August 2016

இடஒதுக்கீடு வேண்டுமா? வேண்டாமா?

வி பி சிங்
சரியாக 26 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி 1990 ல் தான் விபிசிங் அவர்களால் மண்டல் கமிசனின் சாதிவாரியான இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதுமண்டல் கமிசன் 1979ல் ஜனதா கட்சியின் மொராஜி தேசாய் பிரதமராக இருந்த போது அமைக்கப்பட்டது என்பது ஒரு கூடுதல் தகவல்.


விபிசிங் அதை நிறைவேற்றியபோது ஒருபுறம் அவரை தேவதூதராக பார்த்தவர்களும் அதே சமயம் அவரின் மண்டல் கமிசனின் இடஒதுக்கீட்டை எதிர்த்தும் பல போராட்டங்களும் வெளியே அதரிப்பதுபோலவும் மனதளவில் அதை ஏற்றுக்கொள்ளாதவர்களும் என அனைவரும் அடக்கம். என்ன இருந்தும் மண்டல் கமிசனின் பரிந்துரைகளை ஏற்று இடஒதுக்கீட்டை அமல் படுத்திய சில மாதங்களிலேயே பாசக விபிசிங் அவர்களுக்கு வழங்கி வந்த ஆதரை விலக்கி அவரின் ஆட்சியை கவிழ்த்ததற்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாக நினைத்தால் உங்களது புத்திக்கூர்மையை அனைவரும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

சரி அப்படி என்னதான் மண்டல் கமிசன் பரிந்துரைத்தது அதன்மீதான வாத பிரதிவாதங்கள் என்ன என்பதையும் பார்ப்போமே.


அதில் முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது பிற்படுத்தப்பட்ட (BC) வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு 27% ஒதுக்கீடு. சிலர் இதை அதிகம் என்றனர். இந்தியாவில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களின் கணக்கிற்கு இதுமிகக் குறைவு என்று மண்டலே ஒப்புக்கொண்டார். ஆனால் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் 50%தான் இடஒதுக்கீட்டிற்காக வழங்க முடியும் என்று சொன்னதனால் தமது பரிந்துரை நீதிமன்ற வாசலிலேயே நின்றுவிடக்கூடாது என்பதற்காக பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்காக 27% ஒதுக்கீட்டை ஒப்புக்கொண்டார். அதில் பிற்படுத்தப்பட்ட(BC) வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 27% கொடுத்தது குறைவுதான் இருந்தபோதும் அந்த 27% முழுமையாக நிறைவேற்ற இன்னும் 25 வருடம் ஆகும்என்ற அவருடைய வாதம் கூட இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் நிறைவேறவில்லைஇதையெல்லாம் இடஒதுக்கீட்டிற்கு எதிராக பேசுபவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.


இன்று சாதிவாரியான இடஒதுக்கீடு வருமானத்தின் மீதான இடஒதுக்கீடாக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக ஆதிக்கச் சாதியினராலும் ஏன் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களாலும் இளைஞர்களாலும் முன்வைக்கப்படுகின்றதுமேலும் ஐஐடி போன்ற தரம்வாய்ந்த (அப்படியா?) உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு என்பது தகுதித் தேர்வின் அடிப்படையில்தான் நடத்தப்படுகின்றன. அப்படித்தான் நடத்தப்பட வேண்டும் என்று சொல்பவர்களுக்கு விபிசிங் கொடுத்த பதில்அப்படிப்பட்ட உயர்கல்வி நிலையங்களில் படிக்கத்தேவை புத்திக்கூர்மை மட்டுமல்ல ஒடுக்கப்பட்டவர்களின் மீதான இறக்கப்பட்ட இதயுமும்தான்”. இப்படி பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கே இந்த நிலையென்றால் இன்னும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட பழங்குடியினருக்கு?


இன்னும் முக்கியமான ஒன்றை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மண்டல் கொடுத்த பரிந்துரை என்பது பொத்தாம்பொதுவான அல்லது சராசரி எண்ணிக்கை இல்லை. அவர் மத்திய வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கையையும் மக்கட்தொகையின் எண்ணிக்கையையும் அதில் பல்வேறு சாதி பிரிவுகளின் கணக்கெடுப்பின் படியும் வேலையின் தன்மை (உதவியாளர், உதவி மேலாளர், மேலாளர் போன்றவை) என்பதை கணக்கில் கொண்டுதான் இடஒதுக்கீட்டுக்கான பங்கு வழங்கப்பட்டது, சொல்லப்போனால் மேலாளர் போன்ற உயர்நிலை பதவியில் இத்துனை சதம் இடஒதுக்கீடும் அதற்கும் கீழ் அதற்கும் கீழென அனைத்து நிலைகளிலும் இடஒதுக்கீடு உள்ளது. ஆனால் இன்றைய நிலையில் கீழ் நிலையில் உள்ள பதவிகளில் எடுத்துக்காட்டாக மாநிலத்தின் கையில் இருக்கும் துறைகளில் ஆசிரியராக காவல்துறையில் மருத்துவம் போன்ற இன்னபிற துறைகளிலும் ஏறக்குறைய இடஒதுக்கீட்டை மாநில அரசுகள் பூர்த்தி செய்தாலும், உயர்பதிவிகளில் இன்னமும் உயர்சாதிகளின் ஆதிக்கம் இருப்பது வெளிச்சமே. இவையெல்லாம் உயர்சாதியினர் அப்படிப்பட்ட உயரத்தில் இருப்பதனால் வரும் காழ்ப்புணர்ச்சியென நீங்கள் கருதினால் அது முற்றிலும் தவறு.


இன்னொரு கூற்றும் நம்மிடையே வசதி குறைந்தவருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பது. சொல்லப்போனால் இந்த இடஒதுக்கீடு என்பது ஒரு எதிர்வினை என்பதும் இதுதான் தொடக்கமல்ல என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். நூற்றாண்டுகளாக இந்தத் துணைக்கண்டத்தில் வசதியின் அடிப்படையில் கல்வி மறுக்கப்படவில்லை. அவர் பிறந்த சாதியின் சமூகத்தின் அடிப்படையில்தான் கல்வி மறுக்கப்பட்டது. அதில் எழுந்துவந்தவர்தான் திருவாளர் அம்பேத்கர். அவரைப்பற்றித் தெரிந்தவர்களுக்கு இது விளங்கும். ஆக சாதியின் அடிப்படையில் தான் கல்வி என்றிருந்த வருணாசிரம தத்துவத்திற்கு நேர் எதிர்தான் இந்த இட ஒதுக்கீடு. எந்த அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டதோ அதே அடிப்படையில் தான் கல்வி வழங்கப்படவேண்டும் என்பது தான் சாசனம். இந்திய அரசிலமைப்புச்சாசனம் சொல்வது இதனடிப்படையில்தான். அதாவது சமூகத்தில் கல்வியில் பிற்படுத்தப்படவர்கள் என்றுதான் வரையறை செய்கிறதே தவிர வருமானத்தில் பிற்படுத்தப்பட்டவர் என்று அல்ல.


நாம் இன்று பணம் மட்டுமே சார்ந்த வாழ்க்கைமுறைக்கு மாறிவிட்டோம் என்பதன் வெளிப்பாடுதான் இடஒதுக்கீடும் வருமானம் சார்ந்தவொன்றாக இருக்கவேண்டும் என்பது. சமூகத்தின் ஏற்றத்தாழ்வின் பிடியில் ஒருநாள் கூட கழிக்காதவர்கள் தான் இப்படிப்பட்ட கூற்றை முன்வைக்கின்றனர். ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவன் தனது சக பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவனுக்கு இருக்கும் உரிமை இன்னும் கிட்டவில்லையே என்பதை எண்ணாமல் வருமானம் சார்ந்த வாதங்கள் வைப்பது இன்னும் நாம் இந்த நூற்றாண்டுகால வரலாற்றில் கோடிகணக்கில் இழந்துவிட்டு பைசாக்களில் பொருக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதற்குச் சமம்.


இதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். 
இடஒதுக்கீடு என்பதே சமூக அநீதி இடஒதுக்கீட்டிற்கு மாற்றாக வரும்சமூக நீதி இடஒதுக்கீடு”. இனியாவது அம்பேத்கரும் மண்டலும் சொன்னதைப் படிப்போம்.

1 comment :

Post a Comment