Saturday 24 January 2015

ஓதிமலை – பொங்கலுக்கு ஓர் பயணம்

ஓதிமலை அடிவாரத்திலிருந்து
இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவிற்கு நான் சென்ற ஒரு புது இடந்தான் இந்த ஓதிமலை. சத்தியமங்கலத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இருக்கின்ற முருகனின் கோவில்களில் மிக உயர்ந்த ஒன்று கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு படிக்கட்டுகளைக் கொண்டது. மலை உச்சியில் இருந்து பவானிசாகர் அணைக்கட்டு நன்றாகவே தெரியும்.  கிட்டத்தட்ட மூவாயிரம் அடிகள் உயரம் உள்ளது. மற்ற மலைகளைப்போல் அல்லாமல் சரியாக ஒரு கூம்பைக் கவிழ்த்தியது போலொரு அமைப்பு. மலையினது அடிவாரத்திலேயே உள்ள ஊர் கள்ளக்கரை. இவ்வூர் மக்களனைவரும் மாட்டுப் பொங்கலன்று பொழுது சாயும் வேலையில் கும்மியடிப்பார்கள். ஓதிமலையை முழுமையாக ஏறி இறங்கிய அனுபவம் பற்றியதுதான் இக்கட்டுரை. 


மாட்டுப்பொங்கல் நாள். காலையில் நேரமே எழுந்து அவசரசரமாகக் புறப்பட்டு கோபிசெட்டிபாளையத்திலிருந்து மகிழுந்தில் கள்ளக்கரை நோக்கிப் புறப்பட்டோம். சரியாக கோபியிலிருந்து சத்தி இருபத்தி ஐந்து கி,மீ. அதேபோலத்தான் சத்தியிலிருந்து கள்ளக்கரை இருபத்தி ஐந்து கி.மீ. அரை மணி நேரத்திலேயே வந்து சேர்ந்துவிட்டோம். எதுக்கு கள்ளக்கரை? என் வாழ்க்கையில் இதற்குமுன் வந்ததோ அல்லது எனது சொந்தங்களோ கிடையாது. ஆனால் சென்ற வருடம் எனது அக்கா பூரணிக்கு திருமணம் நடந்தபோது மாப்பிள்ளை அந்த ஊரைச் சேர்ந்தவர்தான். பூனாவில் வேலையில் இருந்தவர். பொறியாளர். திருமணம் ஆனது முதலே அங்கு செல்லவேண்டுமென்ற ஆவல் இருக்கவே காலங்கள் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தன. சுற்றிலும் நன்செய் நிலங்களே. பவானிசாகர் அணை பாசனம். முழுக்க முழுக்கவே பச்சைப்பசேலென்றே இருக்கும். புகையிலை வாழை கரும்பு பூக்கள் இங்கு முக்கியமான வருமானங்களில் ஒன்று.


இந்த ஆண்டு பொங்கலுக்கு வாய்ப்பு கிட்டவே தவறவிடக்கூடாதென்று புறப்பட்டாயிற்று. மதியத்திற்குள் கரும்பும் பலகாரங்களும் ஒரு பிடி பிடிச்சாசு. மதியம் சைவ சாப்பாடு. முருங்கை சாம்பாரும், ரசமும், தயிரும், நெய்யில் இட்டு வனக்கிய முந்திரி போட்ட பாயசமும், ஆட்டாங்கல்லில் ஆட்டி சுட்ட பருப்பு வடையும் அட அட!!! எல்லாம் முடிந்தபின் சரி ஓதிமலைக்கு போய் அடிவாரத்திலேயே பார்த்துவிட்டு வந்திடலாம் என்பது தான் திட்டமே. ஆனால் நாங்களெல்லாம் இளவடங்களாக(!) இருக்கவே சரி ஏறித்தான் பார்க்கலாமே என்ற முடிவெடுத்து தங்கை தம்பிகளோடு என்னோடு சேர்த்து நான்கு பேரும் ஏறினோம். 
ஓதிமலை ஏறும் போது என்னையே எடுத்த போது. மற்றும் முழு மலையும் கீழிருந்து
ஏற்கனவே நான் தேசிய மாண்வர் படையில் இருந்த காரணத்தினால் இந்த மாதிரியாக மலையேருதல் உடற்பயிற்சிகள் போன்றவற்றை இந்த உடல் அனுபவித்துவிட்டதால் தொடக்கம் முதலே ஒரு வேகம்தான். வெறுங்காலில் அதுவும். எங்காது கால் சுலுக்கிவிடுமோ என்று சிறு பயம். அப்படி ஏதேனும் ஆகிவிட்டால் அவ்ளோதான். மேலிருந்து தூக்கிக் கொண்டுவருவது அதனினும் கடினம். அதனால் கொஞ்சம் சமார்த்தியமாகவே ஏறினோம். 


பொழுதுசாயும் வேலையென்பதால் வெயிலின் தாக்கம் இல்லை. இருந்தபோதும் தண்ணீர் தாகம் முடியவில்லை. இதில் இயற்கையின் அழைப்பு வேறு. இதோ வந்தாச்சு இதோ வந்தாச்சு நினைத்துக்கொண்டே ஏற வேண்டியதாயிற்று. ஒருவழியாக வந்து சேர்ந்தபோது இதெல்லாம் பறந்தே போச்சு. அப்படியொரு அழகு. கீழுள்ள அனைத்தும் அழகழகாய். பறவைகள் எவ்வளவு பாக்கியம் செய்தவையோ. 
மலையின் உச்சியில் உள்ள நுழைவு வாயில்
ஏறி வரவேண்டிய பாதை
அங்கேயே தண்ணி அருந்திவிட்டு கோயிலுக்குச் சென்றோம். நான் பார்த்த முருக சிலைகளில் இதற்கு மட்டுமே இராவணனனுக்கு இருப்பது போல ஐந்து தலைகள். ஆறு தலைகள் வைத்திருந்தால் புரிந்திருக்கும். ஆனால் ஏன் ஐந்து எனக்கேட்ட போது முருகன் யாரோ ஒரு சித்தருக்கு வழிகாட்டச்சென்று விட்டாராம். எத்துனை புனைவுக்கதைகளோ. அங்கே சிலையருகே சென்று பூசை செய்ய ஐயரும் வெளியே நின்று அதைப்பார்த்துக்கொள்ள எடுபுடி வேலை செய்ய இரு பண்டாரர்களுமே. நான் நாத்திகவாதி. இவர்கள் சொல்லும் கடவுளின் மீது நம்பிக்கையில்லையாதலால் நான் சாமி கும்பிடாமல் முருகனின் சிலையைப் பார்த்தபடி நின்றேன். பூசை முடித்து வந்த ஐயர் தீயை தொட்டு வணங்கச்சொன்னார். நான் சாமி கும்பிடுவதில்லை என்றவுடன் பின் எதற்கு வந்தீர்கள் என்ற ஏளனத்தோடு கேட்டார். திரும்பச்சொன்னேன் நான் முருகனைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்பதற்காக. அவருக்கு முகத்தில் ஈ ஆடவில்லை. பிறகு என்ன எதுவும் பேசாமலே வெளியே வந்துவிட்டேன். 
எவ்வளவு ஆழகாகத் தெரியும் நம் பூமி. மேலே பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதி
இன்னும் நேரமானால் இருட்டிவிடும் என்பதால் வேகமாக இறங்கத் தொடங்கினோம். ஏறியதைவிட மிகவேகம். இரு இரு படிக்கட்டுகளாகத் தாண்டித் தாண்டி. ஏறும்போது குறைந்தது நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். ஆனால் இறங்கையில் வெறும் பத்து நிமிடங்களே. இறங்கயிலேயே எங்கோ கைதட்டும் ஓசைகள். அதுவும் கூட்டமாக. கூர்ந்து நோக்கிய போது அது மலையின் அடிவாரத்தில்தான் என உறுதி ஆயிற்று. 


வேகமாக இறங்கிவந்து பார்த்தால் அந்த ஊர் மக்கள் கும்மியடித்துக்கொண்டிருந்தார்கள். உண்மையில் சீராக எல்லோரும் ஒரே நேரத்தில் கைதட்டிக்கொண்டே பாடிக்கொண்டிருந்தனர். என்னால் முழுதும் புரிந்துகொள்ள முடியவில்லை. அதைச் சரியாகப் பாடியவர்கள் நாற்பது வயதைத் தாண்டிய பெண்களே. அதன் ஒருசில வரிகளிதோ


 போய்வா ராசா கப்பலுக்கு - நீ

 போய்வா ராசா கப்பலுக்கு!

 கடலுதண்ணி அழைக்குதப்பா – உன்ன

 கொம்பஞ்சுறா அழைக்குதப்பா – நம்ம

 குடும்பங்காத்த அப்பனுக்கு துணைபோல நீ

 போய்வா ராசா கப்பலுக்கு 
ஊர் மக்கள் வட்டமாக கும்மியடித்த போது நான் மதில் மேல் ஏறி நின்று எடுத்த போது
உண்மையில் இந்தவரிகள் நமக்கு ஏதோ உணர்த்துகின்றன. இது நமது மக்கள் அக்காலங்களில் எப்படியெல்லாம் இருந்திருப்பார்களென தெளிவாகச் சொல்கின்றது. இந்த வரிகளுக்கான அர்த்தங்களை யோசித்தபடியே மீண்டும் கோபிசெட்டிபாளையம் நோக்கி. மீண்டும் இந்த மலைக்கு வருவோமா மாட்டோமா என்ற ஏக்கத்தோடே அன்றைய தினம் முடிவுற்றது. 

- குட்டிமணி செங்குட்டுவன்