Saturday 11 April 2015

சரவணபெளகொளா - பயணப்பதிவு

கூட வேலை செய்பவரின் திருமணத்திற்காக சரவணபெளfகொளா செல்லும் வாய்ப்பு கிட்டியது. அவர் ஒரு சமணர் என்பதால் சரவணபெளகொளாவில் அவரது திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் பெல்காம். வட கருநாடகத்தைச் சார்ந்தவர். வரவேற்பை பெல்காமில் திருமணத்திற்குப் பிறகு வைத்துக்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். நான் இதை நல்லதொரு வாய்ப்பாகக் கருதி எனது இரு சக்கர வண்டியில் மொத்தமாக 350 கி.மீ தொலைவு ஓட்டவும் அந்தச் சமண தளத்தைப் பார்க்கவும் முடிவுசெய்தேன். அந்த முழு பயண அனுபவம்தான் இந்தப்பதிவு. 
அன்று காதலர் தினம். ஆனால் அவருக்கு அடுத்த நாள் திருமணமென்பதால் காதலர் தினத்தன்றே பெங்களூரிலிருந்து புறப்படவேண்டியதாயிற்று. மாலை ஒரு நான்கு மணி போல் புறப்பட்டு இருப்போம். எனது இருப்பிடத்திலிருந்து சரியாக 160கி.மீ. மொத்தம் மூன்று பேர். இரண்டு வண்டிகள். நானும் சதீசும் ஓட்ட முனுசாமி எங்களில் ஒருவர் மாற்றி ஒருவருடன் வருவார். இந்தப் பயணத்தில் முக்கியமாக மூன்று விடயங்களைச் சொல்லவேண்டும். போகப் போகப் பார்ப்போம்.

குந்தலஹள்ளியிலிருந்து கிருஷ்ணராஜபுரம் ஹெப்பால் யெஷ்வந்த்பூர் வழியாக ஹாசன் மாவட்டம் நோக்கிப் புறப்பட்டோம். ஹாசன் போகும் வழியில்தான் சரவணபெளகொளா உள்ளது. பெங்களூரைத் தாண்டவே ஒன்றரை மணி நேரமாகிவிட்டது. அதாவது வெறும் 40கி.மீ. அதன் பிறகு மற்ற120கி.மீ தூரத்தையும் வெறும் இரண்டு மணி நேரத்தில் கடந்துவிட்டோம். போகும் தேசிய நெடுஞ்சாலையில் ஒருவர் கூட காணோம். வண்டியை 100 க்கு குறையாமல் விரட்டினோம். அது ஒருவகையான இன்பம்தான். இருபுறமும் விவசாயம் சார்ந்த நிலங்கள்தான். பெருநகரத்திலிருந்து வரும் வழியென்பதால் ஆங்காங்கே உணவு விடுதிகளும் பெற்ரோல் மையங்களும். அவ்வளவே. 
நான் தலைக்கவசத்துடன். முனுசாமி என்னுடன். சதீசு எங்கள் பின்னால்

இந்தப்பயணத்தில் மிக முக்கியமான மூன்று விடயங்களில் ஒன்று பயண வழிகாட்டிதான். இதற்கு முன்னால் நாம் இங்கு சென்றதில்லை. கன்னடமும் அவ்வளவு அத்துப்படியில்லை. கூகிள் வரைபடத்தை வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு முழுநேரமும் நாம் இணையத்தோடு இணைந்திருக்கவேண்டும். போகும் வழியில் கைபேசிக்கு தொடர்புகள் இல்லாமல் போகலாம். முக்கியமாக ஆண்ட்ராய்டு என்பதால் கைபேசி சீக்கிரம் செத்துப்போய்விடும். இவையனத்திற்கும் பதில் கிட்டியது. மற்ற எவருக்கும் இது பயனுள்ளதாகவே இருக்கும். அந்த மென்பொருளின் பெயர் “MAPS.ME” . இதை கூகிள் கடையில் (PLAY STORE) வாங்கிக்கொள்ளலாம். என்ன இந்தியத் துனைக்கண்டத்தின் வரைபடத்தை நாம் தரவிரக்கம் செய்யவேண்டும் பிறகு தான் இந்த வழிகாட்டி(Navigation) வேலை செய்யும். இதன் முக்கிய அம்சமே இணையத்தோடு இணைந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கைபேசியின் இருப்பிடத்தை வைத்தே நம்மை வழிநடத்தும். அடி குறையாமல் நாம் எங்கு இருக்கின்றோம் எனக்காட்டுகின்றது. உண்மையில் நான் வியந்துபோன தொழில்நுட்ப வளர்ச்சி இது.

அன்று இரவு ஏறத்தாழ ஒரு எட்டு மணி போல அந்த திருமண மண்டபத்தையடைந்தோம். அங்கேயும் கலாச்சார மாற்றம் நிகழ்ந்துள்ளதை நன்றாகவே காணமுடிந்தது. அதிகம் பேர் பெண்கள் தான். பெரிதாக எந்தவொரு வித்யாசமும் இல்லை. பெங்களூரை ஒப்பிடும்போது. நம் திருமணங்களைப்போலவே இவர்களும் கோட் சூட் போட்டுக்கொள்கிறார்கள், பஃவே முறையில்தான் சாப்பிட வேண்டியுள்ளது. படித்தவர்களாயிற்றே. ம்ம்ம். எல்லாம் முடித்துவிட்டு தங்க ஏற்பாடெல்லாம் செய்திருந்தார்கள். அந்த ஏற்பாடுகளையெல்லாம் பார்த்துத்தான் நான் வியந்துபோனேன்.

நான் சொல்லவந்த இரண்டாவது முக்கியமான ஒன்று அங்கு நான் தங்கியிருந்த இடம். நாங்கள் தங்கவைக்கப்பட்ட இடம் ஒரு சுற்றுலா விடுதி போல. புதிதாக திறக்கப்பட்ட கட்டிடம். A முதல் D வரை நான்கு கட்டிடங்கள். அந்த வளாகத்திலேயே திருமணமண்டபம், நூலகம், அலுவலகக் குடியிருப்புகள் மற்றும் பூங்காவோடு. இவையணைத்தும் அரசாங்கத்தினுடையது, வியப்பே அதுதான். நான் இந்த அளவிற்கு கருநாடகச் சுற்றுலாத்துறையிருக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் பார்த்தவிடமெல்லாம் கன்னடமும் இந்தியும்தான். தமிழ்நாட்டை விடவும் இந்தியின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. எல்லாவற்றிற்கும் மேல் இங்கு தங்குவதற்கு ஒரேயொரு தொலைபேசி அழைப்பு போதும். அதுவும் குறைந்த விலையில் அதிக வசதிகளுடன். உண்மையில் தரமான் கட்டில். தரமான கம்பளிகள், காற்றோட்டமும் வெளிச்சமும் நிறைந்தவிடம். அதிகாலையில் வெதுவெதுப்பான நீர் குளிக்க. அரசாங்கத்திடம் இருக்கும் இப்படிப்பட்ட இடங்கள் உண்மையில் அனுபவிக்கக் குடுத்து வைத்திருக்கத்தான் வேண்டும். அதுவும் விந்தியகிரி மலையடிவாரத்தில். அமைதியான இடம். உண்மையில் போற்றப்படவேண்டிய ஒன்று. சுற்றுலாவுக்கு அதுவும் குடும்பத்துடன் செல்ல நல்லதொரு இடம்.
தரமான கம்பளிகள், படுக்கைகளோடு கூடிய அறைகள்
புதிதாக சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்ட கட்டிடம். இது போல் இன்னும் மூன்று உள்ளன
நல்லதொரு தூக்கத்திற்குப்பின் காலையில் நேரமே எழுந்தாகிவிட்டது. தாலி கட்டும் நேரம் நம் ஊரைப்போல் அதிகாலையில் இல்லாமல் பத்து மணிக்குத்தான் என்பதால் சரி சீக்கிரமே மலையேறி விட்டு இறங்கிவிடலாமென முடிவுசெய்தோம். இந்த முடிவு மிகச்சரியானது என்பது பிறகுதான் புறிந்தது. ஆம் மலை மீது ஏறத்தகுந்த படிக்கட்டுகள் எல்லாமே பாறைகளையே அப்படியே செதுக்கியதுதான். கொஞ்சம் வெயில் பட்டால் சூடேறிவிடும். அதுவும் எங்குமே நிழலில்லை. முழுக்கவும் பாறைகள்தான். மரம் செடி கொடியெதுவுமில்லை. எப்படியோ எங்களது திட்டமும் அதன்படியே இருந்தது. மேலே ஏறினோம். வழி நெடுகவும் இருபிறமும் அத்துனை சமணத் துறவிகளின் சிலைகள். அனைத்தும் உடைகளின்றி. அமர்ந்த நிலைகளில். நின்ற படியும்.
சூரீயன் உதிக்கும் வேலையில் . மலையடிவாரத்தில்

மலையடிவாரத்தில் நாங்கள்

படியில் வெறுங்காலுடன் ஏறத்துவங்கும் முன்

இரு மலைகள் உள்ளன அங்கே. ஒன்று விந்தியகிரி மற்றொன்று சந்தரகிரி. இதில் விந்தியகிரி மலையில் தான் பாகுபலி அவர்களின் சிலையுள்ளது. கடைசியாக அந்த மலையை ஏறி முடித்துவிட்டு உள்ளே வந்தோம். எல்லாமே பாறைகள். ஆனால் கலையயும் பார்க்க முடிந்தது. தமிழ்நாட்டின் கோயில்களில் பார்க்க முடிந்த அதே அளவு சிறிய நுணுக்கமான நிறைய சிலைகளை பாறைகளில் செதுக்கி இருந்தார்கள். அனைத்தையும் படமெடுக்க முடியவில்லை. உள்ளே சமணத் துறவிகள் மற்றும் சமண மதத்தைச் சார்ந்தவர்கள் உட்கார்ந்துகொண்டு எதோ படித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அந்தத்தளம் முழுவதும் தேவனகிரி எழுத்துருக்களைப் பாதுகாத்து வைத்திருந்தனர். ஆம் இந்திமொழியின் ஆதிக்கம் அவ்வளவு இருந்தது. அங்கு நடைபெற்ற கூட்டங்களில் கூட இந்தியிலும் கன்னடத்திலும் மாற்றி மாற்றி ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை பிராத்தனைகள் நடந்தன. 
58 அடி ஒரே கல்லாலான பாகுபலி சிலை

சமணர்களின் வழிபாடு

மலை உச்சியிலிருந்து
இந்தப் பயணத்தின் மூலம் நான் கூறவேண்டும் என நினைத்த அதிமுக்கியமானதும் அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டியதுமான மூன்றாவது செய்தி என்னவென்றால் அது அந்த ஊரின் பெயர்தான். அதன் பெயர் “சரவணபெளகொளா”. ஏன் இந்தப் பெயர் என நீங்கள் கேட்கலாம். ஆம் அதுதான் இங்கு அதிர வைக்கிறது. முதலில் இந்தப் பெயரைப் பிரித்துப்பாருங்கள். சரவண+பெள+கொளா. இந்த மூன்று சொற்களுக்கும் என்ன பொருள்? பொருளில்லாமல் இந்தப் பெயரை வைத்திருக்க வாய்ப்பில்லை. பொருள் தேடினால் சரவணன் என்ற பெயர் தமிழில் முருகனைக் குறிக்கும். சரி இந்த இடத்தை ஏன் முருகன் பெயர் கொண்டு வைக்கவேண்டும். ஆம் இது முருகன் கோயில் தான் என்பதற்கு பல சான்றுகள் நான் இங்கே கண்டு கொண்டேன். மலை மேல் கோயில். மலை தான் முருகனின் வீடென்பார்கள். இது ஒரு சாட்சி. சரவணன் என்ற பெயர் இருப்பது இன்னுமொர் சாட்சி. இந்த இரண்டை விடவும் மிகமுக்கியமான சாட்சி அந்த பாகுபலி ஒரே கல்லாலான 58அடி உயரச் சிலையின் பாதத்தில் “ஓம்” என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்து அதிர்ந்து போனேன். கண்டிப்பாக இது முருகன் கோயிலாகத்தான் இருந்திருக்க வேண்டும். கால மாற்றங்களும் எல்லைகளும் மாற இதுவும் மாறிப்போனது.
இரண்டாவது வரியின் முதல் எழுத்தாக உள்ள "ஓம்" மற்றும் இன்னபிற தமிழ் எழுத்துக்கள்
பெள கொளா என்ற வார்த்தைகள் தமிழ் என்பதை நாம் உற்று நோக்கினால் அறியலாம். தமிழில் வெள்ளை என்பது கன்னடத்தில் “பெள”. தமிழில் குளம் என்பது கன்னடத்தில் “கொளா”. அவ்வளவே. தமிழரின் கடவுளும் தமிழ்ப் பெயரையும் கொண்ட இந்த ஊரும் இந்தக் கோயிலும் தமிழுக்கான அடையாளத்தை சத்தமில்லாமல் தூக்கிப் பிடிக்கின்றன. ஆனால் இந்த ஊரைப் பற்றியோ அல்லது கோயில் பற்றிய தமிழின் தாக்கத்தை இணையத்திலுள்ள குறிப்புகள் எங்குமே பதிவு செய்யப்படவில்லை. மாறாக வரலாறு என்னும் பேரில் நம்மை ஒதுக்கிவைத்திருக்கிறார்கள். எப்படி வெந்தகாலூர் பெங்களூர் ஆனதோ, எப்படி எருமையூர் “மைசூர்” ஆனதோ (வடமொழியில் மகிசம் என்றால் எருமை), அப்படியே சரவணனின் வெள்ளைக் குளம் சரவணபெளகுளா ஆனது.

ஒரே மாதிரியான தூண்கள் அழகாக..

தஞ்சை சிற்பங்களுக்கு ஒத்த ஒரே கல்லாலான 5 அடி சிற்பம்

தமிழரின் எல்லைகள் எப்படி இருந்திருக்கும் எப்படியெல்லாம் நாம் பின்னுக்குத்தள்ளப் பட்டோம் என்ற எண்ணங்களோடு பயணம் முடிந்தது.
பயணம் முடிந்து பெங்களூர் திரும்பச் செல்லும் போது.

1 comment :

karthik said...

Nice article. Loved to read it.

Post a Comment