என்னைப் பற்றி!


பெயர் குட்டிமணி செங்குட்டுவன். பிறந்தது கொங்கு நாட்டில் சின்ன கோடம்பாக்கம் என்று செல்லமாக அழைக்கப்படும் கோபிசெட்டிபாளையத்தில். ஐந்து வயது வரை எனது பாட்டி பழனியம்மாளிடம் அந்தியூர் பிரம்மதேசத்தில். பிறகு முழுக்கவும் கோபியில்தான். பள்ளி ஆரம்பக்கல்வி முதல் பத்தாம் வகுப்பு வரை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் வைரவிழா பள்ளியில். பிறகு பெற்றோரின் ஆசைக்காக பண்ணிரண்டாம் வகுப்பு குருகுலம் பள்ளியில். படித்து முடித்ததும் மருத்துவ கலந்தாய்வின் காலதாமத்தால் பொறியியல் படிக்க நேர்ந்தது. தானியங்கி ஊர்தியியல்(AUTOMOBILE) துறை. பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில். நான்கு ஆண்டுகள் முடித்துவிட்டு பிழைப்பிற்கு பெங்களூர் வந்தாயிற்று. கடந்த ஐந்து ஆண்டுகளாக பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை செய்துகொண்டிருக்கின்றேன். அவ்வப்போது இந்த வலைப்பக்கத்தில் இயங்கி வருகின்றேன். அப்பா ஓய்வு பெற்ற ஆசிரியர். அம்மா ஈரோடு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தலைமைச் செவிலியராக பணியாற்றுகின்றார்.

நாந்தான் வீட்டின் கடைக்குட்டி. எனக்கு முன்னால் முதலில் அக்கா பிறகு அண்ணன். அப்பாவின் தீராத தமிழ் ஆர்வம் காரணமாக அக்காவிற்கு பாண்டிய இளவரசி மங்கையற்கரசி என்ற பெயரும், அண்ணனுக்கு சோழன் திருமாவளவன் என்ற பெயரும், எனக்கு சேரன் செங்குட்டுவன் பெயரும். குட்டிமணி என்ற பெயருக்கான காரணம் எனது வலைப்பூவில் இருக்கின்றது. அதற்கு இங்கே சொடுக்கவும். இதுதான் குட்டிமணி செங்குட்டுவன் என்ற எனக்குப் பெயர்க்காரணம். 

தமிழில் நாட்டம் உடையவன். கவிதையிலும். அதிக வாசிப்புப் பழக்கமும் இருப்பதால் அதிகம் எழுதும் பழக்கமும் உண்டு. அதற்காகவே இந்த வலைப்பக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எழுதி வருகின்றேன். கடவுள் நம்பிக்கையில்லை. அரசியலில் ஆர்வமுண்டு. சமூகம் சார்ந்த செயல்பாடுகள் அதிகம். சீக்கிரம் பழகிவிடும் குணம். அய்யயோ இவன் சரிபட்டு வரமாட்டான் என்றேல்லாம் நினைக்கவேண்டாம். நட்பு வட்டம் பெரிது. ரசனைக்காரன் தான். மழை முதல் குழந்தை வரை எல்லாவற்றையும் ரசிப்பவன். ஓவியங்களில் ஆர்வமுண்டு. வெளிப்படையானவன். தவறென்றால் யாராக இருந்தாலும் கோவம் வரும். தேசிய மாணவர் படையில் பள்ளியிலும் கல்லூரியிலும் இருந்தவன். தொழில் முனைவோனாகவேண்டும் எனபதே குறிக்கோள். முட்டாள்கள் தினத்தில் பிறந்த அறிவாளி என்று நானே என்னைக் கூறிக்கொள்வேன். ஏனென்றால் உள்ளத்தனையது உயர்வுதானே? :P இன்னமும் என்னைப் பற்றித்தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும். வணக்கம்.