Friday 24 June 2016

மதுக்கரை மகாராஜும் பராசக்தியும்

வனத்துறையால் கும்கி யானைகளின் உதவியோடு வண்டியில் ஏற்றப்பட்ட மதுக்கரை மகராஜ்
சமூக வலைதளம் .

விசித்திரம் நிறைந்த பல கருத்துக்களைச் சந்தித்திருக்கிறது. பல புதுமையான ஆட்களை அடையாளம் காட்டியிருக்கிறது. ஆனால் இந்தக் கருத்தோ விசித்திரமானதும் அல்ல சொல்ல வந்த நானும் புதுமையானவனும் அல்ல. காட்டுப்பாதையிலே சாதாரணமாகத் தென்படக்கூடிய ஜீவன் தான் நான்.

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தேன், விளைநிலங்களை நாசம் செய்தேன், இருவரைக் கொன்றேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.

நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை. நிச்சயமாக இல்லை.


ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தேன். வாழைக்கன்றுகளை அழித்தேன் தின்றேன். வாழைக்கன்றுகள் கூடாது என்பதற்காக அல்ல என்னால் பசியை அடக்க முடியவில்லை என்பதற்காக.

வீடுகளின் கதவை உடைத்தேன். அரிசி பருப்பு என கண்ணில் பட்டதெல்லாம் எடுத்தேன். தின்றேன். நீங்கள் சாப்பிடக்கூடாது என்பதற்காக அல்ல. எனக்கு வேறெதுவும் சாப்பிட இல்லை என்பதற்காக.

உனக்கென்ன இவ்வளவு பசி? ஊரிலே யாருக்குமே இல்லாத பசி? என்றுதானே கேட்பீர்கள்?

நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன்.

சுயநலம் என்பீர்கள். என்சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது.

என்னை குற்றவாளி என்கிறீர்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கையில் கொஞ்ச தூரம் நடந்து பார்த்தால் அவன் வந்த காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டெடுக்கும் குயில்கள் இல்லை என் பாதையில். தந்தத்திற்காக சுட்டுப் பொசுக்கும் கயவர்கள் நிறைந்திருக்கிறார்கள். தென்றலைத் தீண்டியதில்லை நான். தீயைத் தாண்டியிருக்கிறேன்.

கேளுங்கள் என் கதையை. தீர்ப்பு எழுதுவதற்க்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

தமிழ்நாட்டிலே இந்த மேற்குத் தொடர்ச்சி மலையிலே பிறந்தவன் நான். காடு என்னை உயிர்த்தெடுத்தது. உயர்ந்தவனாக்கியது. இழந்த என் காட்டைக்காண வந்தேன். பல மிருகங்களைக் கொன்ற வழக்கிலே கூண்டிலே நிற்கிறார்களே இந்த வனக்காவலர்கள் இவர்களின் வலையிலே விழுந்தவர்களில் நானும் ஒருவன். சொந்தங்களைப் பிரிந்தேன். பசியால் திரிந்தேன் மெலிந்தேன். கடைசியில் பைத்தியமாக மாறினேன். ஆம். என் பெயரோ மகராஜ். மதுக்கரை மகராஜ். மங்கலகரமான பெயர். ஆனால் என் வாழ்க்கையிலோ நிம்மதியில்லை. துள்ளி விளையாடி ஓடிய நான் இன்று மனிதர்களுக்கு பயந்து ஓடுகின்றேன். வயிற்றிலே பசி கண்ணிலே நீர் வாழ்க்கையைத் தேடி நான் அலைந்தேன் என்னைத் தேடி மனிதர்கள் அலைந்தார்கள்.

எனக்கு முடிவுகட்டப் பார்த்தனர் பலர். அதிலே சில காமுகர்கள் கைமாறாகத் காட்டைக் கேட்டனர்.

நல்லவர்கள் போல் கல்லூரிகள் ஆலைகள் கட்டி சேவை செய்கிறோம் என்று ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்களே இந்தத் திருடர்கள் இவர்கள் என்னை கைமாறாக ஏக்கர் கணக்கில் நிலங்கள் கேட்டனர். கடவுள் பக்தர்களும் என்னைக் காப்பாற்ற வந்தார்கள் பிரதி உபகாரமாக என்னைக் கோயில்களில் கட்டி வைக்கிறோம் என்றார்கள். இவர்களில் தலைமையானவர்கள் இந்த வனக்காவலர்கள் எந்தன் வாழ்க்கையையே காணிக்கையாகக் கேட்டார்கள்.

என்னை விட்டிருந்தால் எதோ ஒருகாட்டுக்குள் சென்று தின்றோ தின்னாமலோ உயிரோடு இருந்திருப்பேன். என்னைக் கோவப்படச்செய்து அட்டகாசம் செய்து நான் இறப்பதற்கு முக்கியமாக என்னை துரத்தியது இந்த ஊர் மக்கள்தான். இழந்த என் பழைய நிலத்தை விட்டுச்செல்ல நான் விரும்பவில்லை. எப்படியும் இவர்கள் என்னைக் கொல்லத்தான் போகிறார்கள் என்று தெரிந்தும் நான் இந்த நிலத்தை விட்டுச் செல்ல விரும்பவில்லை.

உங்களுக்குச் சொந்தமில்லாத காட்டை அபகரித்து அதை நீங்கள் சொந்தம் கொண்டாடும் போது, எனது பழைய சொந்த நிலத்தைக் காண வந்தது எப்படிக் குற்றமாகும்? ஒரு யானைக்கு அவைகள் வாழ்ந்த நிலத்திலே வாழ வழியில்லை , அந்த நிலத்தைத் தேடி வந்தால் பாதுகாப்பில்லை.

நான்மட்டும் கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் கோயில் வாசலிலே ஒரு நாள், சுதந்திரத்தை விட்டுக்கொடுத்திருந்தால் காப்பகத்திலே ஒருநாள் இப்படி ஓட்டியிடுக்கலாம் நாட்களை. இதைத்தானா இந்த சமூகம் விரும்புகிறது?

கொதித்தெடுக்கும் கோடையின் தாகம் என்னைத் துறத்தியது. பயந்து ஓடினேன்.

கொடும்பசி என் வயிற்றைத் துளைத்தெடுத்தது. மீண்டும் ஓடினேன்.

உயிர் மீதிருந்த ஆசை என்னை பயமுறுத்தியது. ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்.

அந்த ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும். அந்த வாட்டத்தை போக்கியிருக்கவேண்டும் இந்தச் சட்டம் பேசுவோர். செய்தார்களா? வாழ விட்டார்களா என்னை?

ஊரில் புகுந்த அட்டகாசம் செய்தது ஒரு குற்றம், வீடுகளைச் சூரையாடியது ஒரு குற்றம்,  இருவரைக் கொன்றது ஒரு குற்றம். யார் யார் யார் காரணம்?

என்னை கஞ்சிக்கு வழியில்லாமல் அலைய விட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா அல்லது விதியைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்ய விளைந்தது யார் குற்றம்? யானைகளின் குற்றமா அல்லது காட்டை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து மனித குடியிருப்பாக்கியிருக்கும் மனிதர்களின் குற்றமா?

இந்தக் குற்றங்கள் களையப்படும் வரை மதுக்கரை மகராஜுக்கள் குறையப் போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கையின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம் .

வண்டியில் ஏற்றப்படும் காட்சிகள்
கயிறுகளால் கட்டப்பட்ட நிலையில் பதினைந்து வயதேயான மதுக்கரை மகராஜ்
படத்தின் பின்புறத்தில் தெரிவது மதுக்கரையில் அமைந்துள்ள ACC சிமெண்ட் ஆலை. இந்த அளவுக்கு வனவிலங்குகள் அதிகம் காணப்படும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலை
பிடிக்கப்பட்ட அடுத்த நாளே டாப்சிலீப் காப்பகத்தில் இறந்து கிடந்த மதுக்கரை மகராஜ். அதிகப்படியான மயக்க மருந்து அளிக்கப்பட்டதுதான் இதற்குக் காரணம் என வெளிப்படையாகத் தெரிந்த போதும் அதுவே கூண்டில் இடித்து தலையில் அடிபட்டு இறந்துவிட்டது எனக் கூறுவது மனிதமற்றது. 
மதுக்கரை மகராஜ் இறந்த அடுத்தநாளே அதே மதுக்கரையில் தொடர்வண்டியில் அடிபட்டு இறந்துபோன பெண் யானை

9 comments :

sudharsh said...

Sirappu..miga sirappu..visualised elephant in court and pleeding for judgement..creative note..keep up the good work..

குட்டிமணி செங்குட்டுவன் said...

நன்றி சகோ :)

Anonymous said...

A good report on mankind's devastation of forest and its resources. yet on its 5 senses still animals are in forests only very rarely they came out for its food only not for anything. But we as humans despite of having 6 senses no meaning for existence.

Shanmuganathan.N said...

Gud post... written well... day by day man animal conflict s increasing... don't know when tis Will end..

Shanmuganathan.N said...

Gud post... written well... day by day man animal conflict s increasing... don't know when tis Will end..

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

First of all Good creativity...most of the time we only wonder what to do..it is in government and environment ministry's hand...As always in the name of development nature is being exploited...

Unknown said...

Nice way of Explaining Society Problem

Ganapathy said...

Good way to explain this issue...

Post a Comment