Thursday 6 November 2014

தாதுமணல் கொள்ளை - முகிலன் ; புத்தகம் ஒர் பார்வை

நூல் தலைப்பு   : தாதுமணல் கொள்ளை
ஆசிரியர்           : முகிலன்
முதற்பதிப்பு     : ஏப்ரல் - 2014
வெளியீடு         : ஐந்திணை வெளியீட்டகம் 
பக்கங்கள்          : 192
விலை                : ரூ - 160/-

இந்நூல்
1996 இல் தாதுமணல் கொள்ளையை எதிர்த்துப் போராட்டத்தில்  காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர்நீத்த பெருமணல் கூட்டப்புளி சேசு அவர்களுக்கும், பல்வேறு அடக்குமுறைகளுக்கும் அஞ்சாமல் தாதுமணல் கொள்ளையை எதிர்த்துப் போராடி வரும் போராளிகளுக்கும்

ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர் ம.தேவசகாயம், வழக்கறிஞர் மு.இராதாகிருட்டிணன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் ம.க.சவாகிருல்லா ஆகியோர் அணிந்துரை எழுத திரு.முகிலன் அவர்களின் என்னுரையோடு ஆரம்பமாகின்றது இந்தப் புத்தகம்.

புத்தகத்தின் ஆரம்பம் முதலே தனது சாட்டையை சுழற்ற ஆரம்பித்திருக்கிறார் ஆசிரியர். தனக்கே உண்டான கோபத்தை வார்த்தைகளில் கொட்டித் தீர்த்திருக்கிறார். தாதுமணல் உருவாகும் முறையில் ஆரம்பித்து அது கண்டறியப்பட்ட விதம், அதன் பயன்பாடுகள் அதன் மீதான கொள்ளை தொடங்கப்பட்ட முறை, தாதுமணல் எவ்வாறு முறைகேடாக அள்ளப்படுகிறது என்பதையும், அதை எதிர்த்துப் போராடிய கடலோர மீனவ மக்களின் வரலாற்றையும், அவர்கள் எப்படி அடக்கி ஒடுக்கப்பட்டு பிரித்தாளப்பட்டதையும், இதையெல்லாம் தெரிந்த அதிகாரிகளையும் அதிகார வர்கத்தின்  செயல்பாட்டையும் படிப்போரின் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் ஆசிரியர் முகிலன்.
முறைகேடாக தமிழகக் கடலோரங்களில் அள்ளப்படுகின்ற மணல்
இவ்வளவு பெரியதொரு பிரச்சனையை தமிழகம் தழுவி எல்லோரும் அறிந்த போது இதை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவைக் கண்டு மனம் குளிர்ந்தவர்களுக்கு அந்த ஆய்வுக்குழு நடத்திய நாடகத்தை இந்தப் புத்தகத்தில் ஆசிரியர் விவரிக்கும் போது நம்மையே அறியாமல் வரும் கோபத்திற்கு அளவே இல்லை. 

அதிகாரிகளின் மெத்தனம், கொள்ளையர்களின் அடாவடித்தனம், எட்டப்ப அடியாட்களின் கயமை, ஈவு இரக்கமற்ற கொள்ளையர்களின் சுரண்டல், நமது மண்ணின் அவலநிலை, இதையெல்லாம் கண்டும் ஒன்றுமே செய்யமுடியாமலிருந்த மக்களின் கையறு நிலைகளெல்லாம் கொடுமைகளின் உச்சம். இவையெல்லாம் நம் மனதில் விதைக்கும் நம்பிக்கையான விதைகளுக்கு பெருமணலில் துவங்கி பெரியதாழை, மேல்மிடாலம், மிடாலம், குறும்பனை, கூத்தங்குழி வரை தன்னெழுச்சியான மக்களின் போராட்டங்களெல்லாம் செடியாகத் துளிர்விட்டு இன்று ஆலமரமாகவும் அதனை வழிநடத்துபவர்கள் போராட்டத்தையே தாங்கிப் பிடிக்கும் விழுதுகளாகவும் இருப்பது கொடுக்கும் விடுதலையுணர்வு உண்மையில் வியக்கத்தக்கது. 

தூக்கம் வரவேண்டும் என்பவர்களுக்காகவும், தூங்கப் போகும் வேளையில் படிப்பதற்காகவும் எழுதப்பட்ட புத்தகமல்ல இது, முதல் ஐம்பது பக்கங்களைத் தாண்டும் போது ஆசிரியர் கொடுக்கும் புள்ளிவிவரங்களில் தூக்கத்தைத் தொலைத்து, புத்தகத்தை நெஞ்சில் கிடத்தி விட்டம் பார்த்து அடுத்து நாம் என்னதான் செய்யபோகின்றோம் என்ற எண்ணத்தைத் தருவதுதான் இது. 

தேசியக்கட்சிகளின் மாற்றாக சுய உரிமைக்கு நாங்களென தமிழ் மாநிலக் கட்சிகளும், திராவிட வேரைப் பிடுங்கத் துடிக்கும் தேசியக் கட்சிகளும், எவருக்கென்ன நடந்தாலென்ன என இத்தமிழகத்தின் இளமான்களையும மயில்களையும் ஆடவைத்து அவரவர் வயிறு வளர்த்த ஊடகங்களும் இவர்களால் ஆதரிக்கப்பட்ட முதலைவாய் கொள்ளையர்களும், இருபதே வருடங்களில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தாதுமணலையும் இழந்து மலடியாய் நிற்கும் இப்பெருநிலமும் சனநாயகத்தின் சட்டையைப் பிடித்து கேட்கத்தூண்டும் வல்லமை இந்நூலிற்கு உண்டு. உண்மையில் இந்திய துணைக்கண்டத்தின் சனநாயத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட மாற்றமும் அதன் பின்னுள்ள நீண்டகாலத் திட்டமிடலும் கண்முன்னுள்ள பொய்யான அரசியலை வெளிச்சம் போட்டுத்தான் காட்டுகின்றது. 

வைகுண்டராசன்
இவைகளெல்லாவற்றையும் விடவே இவ்வையகத்தின் தன்னிகரில்லா தாதுமணல் வியாபாரி வைகுண்டராசன் யார் என்பதையும் அவர் புலத்தையும், அவர் நடத்தும் கட்டப்பஞ்சாயத்தையும், அவரது அரசாங்க அடிமைகளையும் இவ்வளவு நாட்களாக அந்தக் கடற்கரைக் கிராமங்களில் நடந்த அநியாயங்களுக்கும் இவர் குற்றவாளிதான் என்பதை நிரூபித்து நிற்கும் ஒரு முக்கியமான சாட்சியம்தான் இந்நூல். 

தாதுமணல் கொள்ளையை எதிர்த்துக் கேட்டவர்களின் நிலையைமை ஆசிரியர் விளக்கும்போது அவர்கள் பட்ட வேதனையை பதிவுசெய்ததோடு வரும் நாட்களில் தனக்கும் கூட என்னவேண்டுமானாலும் நிகழலாம் என அவர் கொடுக்கும் வாக்குமூலம் வேதனைக்குறியது. இனிமேலும் அவை நடக்காது அதை நாம் நடக்கவும் விடமாட்டோம் என்றதொரு திடமான தைரியம் தந்த ஆசிரியர் முகிலன் உண்மையில் பாராட்டுக்குறியவர். 

இவ்வளவு நாட்களாக நடந்து வந்த தாதுமணல் கொள்ளைக்கெதிரான போராட்டங்களைச் செவ்வனே பதிவு செய்த ஆசிரியருக்கு எமது கோடி நன்றிகள். ! 

 வெல்லட்டும் மக்கள் போராட்டம்!

- குட்டிமணி செங்குட்டுவன்

1 comment :

Unknown said...

காசுக்காக எதையும் விற்கும் சோற்றுப்பிண்டங்கள் அவர்கள். மணல், தாதுமணல், நீர், வாயு,.. என தமிழகத்தின் இயற்கை வளங்களோடு சேர்த்து தமிழனும் விற்கப்படுகிறான்.

https://m.facebook.com/vvmineralmining

http://vvmineralblog.wordpress.com/

மேலுள்ள முகநூல் பக்கம் மற்றும் வலைப்பதிவுகளில் கொள்ளையர்கள் உலகம் முழுவதும் பரப்புரை செய்கின்றனர்.

Post a Comment