Tuesday 14 June 2016

கார்புரேட்களின் சாதி

சமீபத்தில் எனக்கொரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பெங்களூரிலேயே. உலகளவில் கால்தடம் பதித்த பெரிய வாகன உற்பத்தியாளர்களில் முக்கியமானதும் கூட. பெங்களுர் வந்து அடுத்த மாதத்தோடு நான்கு ஆண்டுகள் நிறைவுபெறுகின்றது. வீட்டிலேயும் ஒரே நச்சு. திருமணத்திற்காக. ஆனால் எனக்கு மட்டுந்தான் தெரியும் இந்தக் காசெல்லாம் பத்தவே பத்தாது இத வெச்சுட்டு கல்யாணம் செய்தால் அடுத்த ஆறு மாதத்திலேயே விவாகரத்து தான். அதனால நானும் வேலை தேட ஆரம்பித்து ஒருவழியாக இந்த நிறுவனத்தில் வந்து நின்றேன்.  

எல்லாமே பிரமாதம் தான் இங்கே. முன்னாடி பின்னாடி சுத்தி உட்கார்ந்து கொண்டிருக்கும் எல்லாருமே என்றாலே ஜெர்மனி போய் வந்திருப்பவர்கள். நாமதான் வட இந்தியாவுக்கே போனதில்லையே. எல்லாமே ஆங்கிலம்தான். திட்டுவதில் இருந்து வாழ்த்துவது வரை. வைரவிழாவில் படித்தாலும் நானும் அதற்கு சலைத்தவனல்ல என்று உளரித்தள்ளிடுவேன். தப்பா கூட பேசலாம் ஆனா பேசாம இருக்கவே கூடாது.

போனவாரம் கூட நம்ம ஊர்க்காரர் ஒருத்தர் ஜெர்மன் போயிட்டு ஐந்து மாதம் கழித்து வந்திருந்தார். சரி எப்புடி போன இடம் நல்லாருந்துச்சா சாப்பாடெல்லாம் எப்புடினு கேட்டுட்டுஇருந்தோம். “ஊரு சாப்பாடு எல்லாமே செம ஆனா என்ன வேலை செய்யுற எடத்துல மட்டும் எல்லாம் நாமலேதான் பாத்துக்கணும். உட்கார்ர எடம் சுத்தி இருக்கிற எடம் எல்லாம் நாமதான் சுத்தமா வெச்சுகணும். இங்கமாதிரி உன் மேசய தொடைக்க ஒருத்தன் குப்பத்தொட்டில இருக்கறது எடுக்க ஒருத்தன் தரைய கூட்ட ஒருத்தன் அப்புடியெல்லாம் எவனும் இருக்க மாட்டான். சுத்தமா வெச்சுகலனா நாம தான் குப்பைல உக்காந்து வேல செய்யணும்னு சொன்னாரு. ஏன்னா இங்க எல்லாத்துக்கும் ஆள் இருக்கு. அவுங்க எல்லாருமே நீல நிற சீருடையில்தான் இருப்பார்கள். இப்புடியே பேசிகிட்டே ரொம்ப நேரம் ஆகிடுச்சு. சரி காலைல சாப்பிட்டது. பசிக்குதே போயி ஒரு டீ சாப்பிட்டு வரலாம்னு எழுந்து போனோம். சரி பக்கத்துல தான கழிப்பற அப்புடியே போய் அடக்கி வெச்சிருப்பத கொஞ்சம் இறக்கிவிட்டுடு வரலாம் என்ப்போனேன்.

டீ பிடித்துவிட்டு அங்கேயே உட்கார்ந்து குடிக்கவும் நல்லவசதிகள் செய்து வைத்திருந்தார்கள். சரி வேலை நிறக்க இருக்கு என்பதால் கழிவரைக்கு போயிட்டு போயிடலாம் என்பதுதான் எண்ணம். அவசர அவசரமாக உள்ளே கழிவறைக்குள் நுழைந்தவுடன் பின்னாலேயே ஒருவரும் அவசரம் அவசரமாக உள்ளே நுழைந்தார். அவர் நீல நிற உடையில் இருந்ததால் நான் கழிவறை சுத்தம் செய்பவர் என்று நின்று வழிவிட சற்றே திரும்பி ஓரமாக நின்றேன். ஆனால் வழக்கத்திற்கு மாறாக கையில் துடைப்பம் ஏதும் இல்லாமல் காகித கப்பில் டீ பிடித்துக்கொண்டு கழிப்பறைக்குள் வந்திருந்தார். எனக்கு முகம் இருக்கமடைந்துவிட்டது.

அவர் என்னையும் சட்டையே செய்யவில்லை. நாற்பது வயதைத் தொட்டிருந்தார். சிறுநீர் கழிக்க ஓரமாக ஒரு இடமும் மலம் கழிக்க சிறு சிறு அறைகளாக மூன்று அறைகளும் இருந்தன. அதில் மூன்றாவது கடைசியில் இருப்பதைத் தட்டினார். ரவி ரவி என்று இருமுறை அழைத்தார். கன்னடத்தில் எதோ சொன்னார். உள்ளிருந்து ஒருவர் கதவைத் திறந்தார். உடனே இவரும் உள்ளே சென்று விட்டார். சென்றவுடன் உள்தாழ்பாளிட்டுக்கொண்டனர். எனக்கு கையும் ஓட வில்லை காலும் ஒடவில்லை. மற்றவர்கள் மலம் கழிக்கும் இடத்தில் ஒருவர் எப்படி தேநீர் அருந்தமுடியும்? விளம்பரங்களில் மனம் சுவை நிறம் என்று தானே போட்டுக்காட்டுகிறார்கள்? அங்கே உட்கார்ந்து குடித்தால் இந்த மூன்றில் என்ன தெரியும் அவருக்கு என்று தெரியவில்லை.

வேலை செய்பவர்கள் தேநீர் அருந்த இடமும் வசதியும் செய்து கொடுத்தவர்கள் கழிவறை சுத்தம் செய்பவர்கள் இளைப்பாற ஒரு இடம் அமைத்துக்கொடுக்க முடியவில்லையா இல்லை முடியாதா? நான் செய்கின்ற வேலை வாகனங்கள் விபத்துக்குள்ளானால் உள்ளிருப்பவர்கள் இறக்காமல் மிகக்குறைவான அடி அல்லது காயத்துடன் எப்படி காப்பது என்பது. அதெல்லாம் இந்தியா வர இன்னும் எத்துனை ஆண்டுகள் ஆகுமோ. அதுவரவே இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமென எனக்குத் தெரியவில்லை ஆனால் மனிதர்கள் சமமாக நடத்தப்படும் நிலை வர இன்னும் எத்துனை ஆயிரம் ஆண்டுகளாகுமென யாருக்குத்தான் தெரியும்???

1 comment :

Ganapathy said...

நல்ல பதிவு சகோ....

இப்ப கல்யாணத்திற்கு ரெடி என சொல்லுங்க...

Post a Comment