Sunday 8 February 2015

அரை வாழைப்பழம்!

என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நிகழ்வுகளில் இதுவுமொன்று. நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பச்சை நிற அரைக் கால் சட்டையும், வெள்ளை நிற மேல் சட்டையும். எனது ஊரிலுள்ள பெரிய பள்ளிகளில் ஒன்றில்தான் படித்தேன். அரசு உதவி பெறும் பள்ளி. நூறு ஆண்டுகளைத்தாண்டி இன்றும் கல்விச்சேவை புரியும் பள்ளி. ஆண்கள் பள்ளி.

அன்றெல்லாம் விவரமே இல்லாத வயசு. எதெற்கெடுத்தாலும் கேள்விதான். யாராக இருந்தாலும் சரி. குறும்புத்தனம் அதிகம். எதைச்செய்யக் கூடாது என்கிறார்களோ அதைத்தான் செய்வேன் என்ற கொழுப்பு. கேட்டால் சின்னப்பையன் எனக்கென்ன தெரியும்? என்று மழுப்பல் வேறு. இன்று நான் இப்படி இருக்க முக்கியமான காரணங்களில் எனது பள்ளி வாழ்க்கை மிக முக்கியமானவொன்று.


நாள் முழுவதும் "கார்டூன் நெட்வொர்க்" என்ற கேலிச்சித்திர ஊடகத்தை மட்டுமே பார்ப்பேன். அத்துனை பிரியம். அதுவும் வீர சாகசத் தொடர், அறிவியல் சம்மந்தமான கதைகள், தெனாலிராமன் கதைகள் எல்லாம் சோறு தண்ணியில்லாமல் பார்க்கக் கண் கோடி வேண்டும். கீரை (spinach) சாப்பிட்டால் பலம் வரும் என்ற சாதாரண கேலிச் சித்திரமான பாப்பாயி ஒரு கடலோடி (Popoye- the sailor man) மூலம் என்னைப்போன்ற கோடி சிறு பிள்ளைகள் மனதில் நல்லதை விதைத்த தொடர். சுகூபிடூ (Scooby doo) மூலம் பேயெல்லாம் இல்லை சில பல அறிவியல் தந்திரங்கள் மூலம் பேய் இருப்பது போல நம்ப வைத்து பயப்பட வைப்பார்கள் என்ற அழுத்தமான பதிவை என்னுள் ஏற்படுத்தியது. இன்னும் நிறைய தொடர்கள் இருக்கின்றன. சாதி மதம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றெல்லாம் இல்லை. நிறைய தொடர்கள் ஒரு நான்கைந்து பேரை கூட்டாகத்தான் வைத்து எதையும் செய்து முடிப்பார்கள். தனிநபர் முக்கியத்துவம் இருக்காது. கூட்டு முயற்சியை வலியுருத்தியவை.

ஆனால் இன்று முழுக்க மதமயமாகிவிட்டது. மகாபாரதமென்ன, இராமாயணமென்ன, சோட்டா பீம் என்ன. ம்ம்ம். வார வாரம் சனி ஞாயிறு வந்துவிட்டால் தொடர்ந்து பிஞ்சுகள் மனதிலேயே மதத்தைப் பரப்ப ஆரம்பித்துவிடுகிறார்கள். என் பிள்ளைகளை என்போல் எப்படி எதைப் பார்க்க விடுவதென்றே தெரியாமல் விழிக்கிறேன்.

ஆனால் இவற்றையெல்லாம் விட என்னுள் ஆழமாக மூடநம்பிக்கையை தூக்கியெறிந்தது ஒரேயொரு கேள்விதான். என் அப்பாவின் கேள்வி. அன்று பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பியிருந்தேன். தினமும் மாலை வீடு திரும்பியவுடன் சாப்பிடுவது வழக்கம். அப்புடியாவது நான் குண்டாக மாட்டேனா என்ற என் தாயின் ஏக்கம். அதனால் சகலமும் உட்கார்ந்த இடம் தேடி வரும். பாலும் பழமும் கைகளில் ஏந்தி அட அட.ம்ம்ம். அப்படியொரு கவனிப்பு. பால் ஒருபுறமும். சாப்பாடு ஒருபுறமும். ஊட்டி விட்டால் இன்னமும் சீக்கிரம் குண்டாவேன் என்று பொய் சொல்லி ஊட்டிவிடச்சொல்வேன். இல்லையென்றால் சாப்பிட முடியாது என்று பிடிவாதம் வேறு. எல்லாம் அம்மாதான். கவனிப்பெல்லாம். வாயைப் பிளந்து அந்த கேலிச்சித்திரங்களைப் பார்க்கும் போது வாயில் வைத்து ஒரே திணி. அவருக்குத் தெரிந்த ஒரே வழி.

அன்று வாங்கி வந்த வாழைப்பழச் சீப்பில். ஒரு இரட்டை வாழைப்பழமிருக்க அது என் கண்ணை உறுத்தியது. ஒரே தோல் ஆனால் இரண்டு பழங்கள். அதை எப்படியாவது சாப்பிட வேண்டுமென்ற ஆசை. அம்மாவிற்கு அது தெரிந்தே இருந்தது. அதை எடுக்கச்சென்ற போது அம்மா சொன்னாள் "டேய் அதை சாப்பிடாத. அத சாப்டா இரட்ட புள்ள புறக்குமாம வேணாம்". அட இப்படியா சங்கதி. அது எப்படி இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டா இரட்டை குழந்தை பிறக்கும்? அந்த வயதில் எனக்கென்ன தெரியும்? திரும்ப அம்மாவிடமே கேட்டேன். "சொன்ன பேச்சி கேக்க மாட்டியா நீ?" என்று ஒரே போடாக போட்டுவிட்டாள். வாய் திறக்கவில்லை நான். தனியாக உட்கார்ந்து கொண்டு ஒரே தீவிர ஆராய்ச்சி. ஒன்றுமே விளங்கவில்லை.

சரி இதற்குச் சரியான ஆள் நம்ம அப்பாதான் என முடிவெடுத்தேன். தீவிரமாக எதே கணினியில் பார்த்துக்கொண்டிருந்தார். முன்னாள் ஆசிரியர். இந்நாள் மருத்துவர். சரியான ஆள்தான். நரைத்த முடி. நரைத்த தாடி மீசை. வெள்ளை வேட்டி வெள்ளைத் துண்டு வெள்ளைச் சொக்கா. அவரிடம் ஒரு பயம் கலந்த மரியாதையுண்டு.

"அப்பா ..அப்பா?". இரண்டு முறை கூப்பிட்டேன்.

"சொல்லு" என்றார்.

அவர்முன் வாழைப்பழத்தை நீட்டினேன். "ஏம்பா அம்மா சொல்லிச்சு இரட்டை வாழப்பழம் சாப்டா இரட்ட குழந்த புறக்குமாமா? எப்புடிபா? " என்றேன் நான்.

என்னைப் பார்த்தார் . என் கையில் இருந்த வாழைப்பழத்தைப் பார்த்தார்.

அவரது பதிலுக்கு எதிர்பார்த்திருந்தேன் நான்.

அவர் சொல்லப்போகும் பதில் எப்படி இருக்கப்போகும் என்று மனதில் ஒரு தீவிர திரைப்படமே ஓடிக்கொண்டிருக்க, அவர் கேட்டதோ கேள்வி.
அதற்கு பதில் எனக்கே தெரியுமே.

"அப்போ அரை வாழைப்பழம் சாப்டா? " கேட்டுவிட்டுப் புன்னகைத்தார்.

நான் அடச்சீ இவ்வளவுதானா என்று நெளிந்து கொண்டு போய் அந்த இரட்டை வாழைப்பழத்தை எடுத்துத் திண்றுவிட்டேன். அன்று நினைத்துக் கொண்டதெல்லாம் ஒன்றுதான். இப்படி எத்துனை எண்ணங்கள் நம்மை ஏமாற்றி வைத்திருக்கின்றனவென்று.

No comments :

Post a Comment