Saturday 27 June 2015

வெள்ளையம்மாவா? வெண்ணையா?



தமிழர்களுக்கு பெயர் வைத்தல் என்பது கொஞ்ச காலமாகவே ஒரு கிறுக்குத்தனமாகத்தான் இருக்கின்றது. சாதகம் பாத்து நியூமராலசி பாத்துத்தான் பெயர் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். என் வயதொத்த நண்பர்களுக்கே முக்கால்வாசி வடமொழிப் பெயர்கள். பிறகு எப்படி இப்போ பிறக்கின்ற குழந்தைகளுக்கு மட்டும் தமிழில் வைப்பார்கள் என எதிர்பார்க்க முடியும். ஆனால் நாமும் நாம் சார்ந்த குடும்பத்தில் இதை மாற்றமுடியும். அப்படி ஒன்றைத்தான் நான் என் நண்பர்கள் உறவினர் மத்தியில் நடத்திக்கொண்டிருக்கிறேன்.

எனது அம்மாவின் சிறுவயது தோழியின் முதல் மகளின் அக்கா. அதாவது அவர் அம்மாவின் அக்கா மகள். பெயர் சரண்யா. எனக்கும் மூத்தவர்தான். எனக்கு சிறுவயது முதலே அவரைத்தெரியும். காதல் செய்தார். அவரையே திருமணமும் செய்தார். அவருக்கு குழந்தையும் பிறந்தது. பெண் குழந்தை. பிறந்த இரு நாட்களுக்குள் சென்று பார்த்தேன். அப்பாவைப் போன்றே கொஞ்சம் கரு நிறம். ஆனால் கொள்ளை அழகு. பின்ன தமிழச்சி ஆச்சே. ஆளானப்பட்ட கிளியோபாட்ராவே கருப்புதான். எனக்கு தமிழில் பெயர் வைத்துக் கொஞ்சவேண்டுமென்று ஆசை. அப்பாவிடம் கேட்டேன்.
“பேரு முடிவாச்சுங்களா? முடிஞ்சா தமிழ்ல பேரு வைங்க” என்றேன்,
“அதெல்லாம் பாத்துக்கலாம். சோசிகார்ருகிட்ட பேசியிருக்குதுங்கோ. அந்தாளு வ வே வரிசைல வெக்கச் சொன்னாருங்கோ” என்றார்.
எனக்கு அங்கியே தூக்கிப்போட்டது. என்னடாது இவ்ளோ படிச்சுருக்காப்ல ஆனா இதெல்லாம் போய் நம்பிட்டு இருக்காப்ல. நம்ம வாய் வேற சும்மா இருக்காம சொறிஞ்சுட்டா வம்பா போயிடும். சரி நடையகட்டலாம்னு “போயிட்டு வரனுங்கோ” என்று கிளம்பிவிட்டேன்.

அடுத்த மூன்று மாதங்கள் கழித்து வீட்டுக்கு போனபோது அவர்களைப் பார்க்க நேர்ந்தது. பிள்ளைக்கு பெயர் வைத்தாகிவிட்டது. என்னவென்று கேட்டபொதுதான் “வேணு வர்சினி” என்றார்கள். ஆகா. வெச்சுட்டாய்ங்களா. நான் அப்போவே நினைத்தேன் இப்படியெல்லாம் நடக்குமென்று. சரி பதிலுக்கு நாமும் ஒரு பெயர் வைப்போம் என்று யோசித்தேன். மாதமானால் சிறு வயதில் ஆட்டுக்கறி சாப்பிடுவதுண்டு.

“போயி நல்லா வெள்ளாட்டுக்கறியா எடுத்துட்டுவா” என்பாள் அம்மா.
“நானும் போயி வெள்ளாடு வெள்ளையாத்தான இருக்கோனு நீங்க என்ன கருப்பு ஆட்ட வெட்டிக் குடுக்கிறீங்க? “ என்று அவர்ட சண்ட போட்டா அவரு நம்ம ஊர் முனியாப்புல அறுவால தூக்கி காட்டுராரு. நம்ம கறிய வெட்டி வித்துருவாங்கடோய்னு ஓடியாந்து அப்பாகிட்ட சொன்ன
“அட கூறுகெட்ட பயலே. வெள்ளாடு கருப்பாதாண்டா இருக்கும்”னு சொன்னாரு. 

இதுதான் எனக்கும் தோன்றியது. உடனே அவளுக்கு “வெள்ளையம்மா” என்றே பெயர் வைத்தாயிற்று. அவிங்க அம்மா என்கிட்ட
“ஏண்டா தம்பி எம்புள்ள கருப்பாருக்கு நீ என்னடா வெள்ளயம்மானு பேரு வெச்சு கூப்புடர?” என்றாள். அவர்கிட்டயும் வெள்ளாட்டுக்கதையச் சொல்லி
“இனிமே உங்க பொண்ண நான் வெள்ளயம்மானு தான் கூப்புடுவேன்” என்றேன். சரி போ எதோ சின்னப்பய ஆசப்பட்டுட்டான்னு உட்டுட்டாங்க.
வெள்ளையம்மா :) பாரியூர்த் திருவிழாவில் அவள் சிரிக்கும் சிரிப்புக்கு கோடி கொடுத்தாலும் பத்தாது. 
அதிலிருந்து நான் எப்போ அவளைக் கொஞ்சினாலும் அவரை வெள்ளையம்மானு தான் கொஞ்சுவேன். என்ன எப்போ பாத்தாலும் அவளின் அம்மாவும் சொந்தக்காரங்களும் வெள்ளையம்மானுதான் கூப்புடுராங்க. இப்போ அவளுக்கு இரண்டரை வயது. இப்போ வரைக்கும் அப்புடித்தான் கூப்புடுறேன். என்னாகுமோ அவள் பெரிய பிள்ளையான பிறகு. ஆனால் நான் புரிந்துகொண்டது நாமாகவே இப்படி எதாது செய்தால்தான் அவர்களுக்கு பிடிக்கிறது. இவர்களிடம் போய் இலக்கியமும் வரலாறும் சொல்லிக்கொண்டிருப்பது வேலைக்காகாது.

ஆனால் அவளது அம்மா இவளை பெரிய பிள்ளையான பிறகு இப்படியெல்லாம் கூப்பிடக்கூடாது எனக்கூறிய போதுதான் எனக்கு இன்னொரு நிகழ்வு நினைவுக்குவந்தது.

என் அப்பா மருத்துவராக இருப்பதால் தினமும் நிறைய பேர்களைச் சந்திப்பது வழக்கம். அப்படியொருநாள் கோபி கலைக்கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்பவர் ஒருவர் காய்ச்சலுக்கு அப்பாவிடம் மருந்து வாங்கிச்செல்ல வந்திருந்தார்.

அவர் பெயர் நவநீதன். ஏதேதோ பேசிக்கொண்டிருக்கும் போது அப்பா திடீரென்று “போய்ட்டு வாயா வெண்ண” என்றார். அப்பாவுக்கு 75 வயது. அவருக்கு வெறும் 45தான் இருக்கும். கோவம் வந்துவிட்டது அவருக்கு. யாரப்பாத்து என்ன சொன்னீங்க என்று சினிமா வரிகளெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார். ஆனால் அப்பா சிரித்துக்கொண்டே
“பின்ன வெண்ண னு பேரு வெச்சா வெண்ண னு தான் கூப்புட்டோனும்” என்றார். நவநீதம் என்றால் வடமொழியில் வெண்ணெய் என்று அர்த்தமாம். அதனால்தான் நவநீதக் கிருட்டிண்ன் என்ற பெயரும் உண்டு என்றார். அப்போ போன நவநீதன் இன்னமும் வீட்டுப் பக்கம் எட்டிப்பாக்கலை. தமிழன் இப்புடி முட்டாளா போய்ட்டானே என்று அப்பா விசனப்பட்டுக்கொள்வார்.

வெண்ணெய் என்று பெயர் வைத்துத்திரிவர் மத்தியில் வெள்ளையம்மா என்ற பெயர் ஒன்றும் குறச்சலில்லை என்று நானே முனகிக்கொண்டேன்.

3 comments :

Unknown said...

Super anna !!! Epadi tha ipadi yosikaringalo !!??

Unknown said...

Hats off Macha... Unna maari nanban kidaika naanga kuduthu vechirukanungo... Mudivurai utharanam enaku migavum pidithirukirathu...

Krishi Vinay said...

Really superb..proved tat u r tamilian

Post a Comment