Sunday 19 April 2015

மா.ANBALAGAN கதை



வைத்தியநாதனும் பெருமாளும் நேர் எதிர். ஆனால் ஒரே பள்ளியில் ஆசிரியராக பதினைந்து வருடங்களுக்கும் மேலாக வேலை செய்கிறார்கள். ஏனோ அன்று பெருமாள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வரவில்லை. தலைமை ஆசிரியரின் வேண்டுகோளுக்காக வைத்தி பெருமாளின் வகுப்பிற்குச் செல்ல நேர்ந்தது. வேண்டாவெறுப்பாக.

காலை முதல் பாடவேலையே பெருமாளின் வகுப்பிற்குச் சென்றிருந்தார் வைத்தி.. அதுவும் ஒரு நொடி காலதாமதமாக வந்தவர்கள் அனைவரையும் வெளியே முட்டி போடவைத்தார். என்ன செய்ய பெருமாள் மீதிருந்த கோவமெல்லாம் அந்தப் பொடியன்கள் மீதுதானே காட்டியாக வேண்டும். எட்டாம் வகுப்புதான் என்றாலும் அவர்களும் பொடியன்களே அல்ல. வைத்திக்கும் பெருமாளுக்கும் சண்டை வந்ததே இந்தப் பெரும் பொடியன்களால்தான். பெருமாளுக்கு எப்போதும் ஆதரவுதான் அந்தக் கோவம். பாதி பேர் வெளியே முட்டி போட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். எழுபதுகளில் இப்போது இருப்பது போல் பசங்களை அடிக்கக் கூடாது என்றெல்லாம் கிடையாது, தாருமாறுதான். கேட்க எவனும் இருக்க மாட்டான்.

கோவத்தோடே மெதுவாக வருகைப்பதிவேட்டை எடுத்தார். பக்கங்களைப் புரட்டிப்பார்த்தார். மேலும் கோவம் தலைக்கேறியது. பெருமூச்சு விட்டுவிட்டு வெளியே வந்துவிட்டார். பசங்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. வெளியே வந்தவர் நேராக தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று ஏதோ கத்திக்கொண்டிருந்தார். பின் சென்று ஒளிந்து பார்த்த பசங்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவர்களில் ஒருவன் தான் அன்பு. அன்பழகன். அன்பழகன் மாரிமுத்து.

அன்று முழுதும் யாருமே அந்த வகுப்பிற்கு வரவில்லை. பசங்களைச் சொல்லவா வேண்டும். கொண்டாட்டம்தான். பள்ளி முடிஞ்சதும் நேரே அன்பழகனும் முனுசாமியும் பெருமாள் வாத்தியாரைப் பார்க்கப் போனார்கள். மாரிமுத்துவிடம் சொல்லி அன்பழகனை பள்ளியில் சேர்த்ததே இந்தப் பெருமாள் வாத்தியார்தான் என்பதால், அன்புவுக்கு பெருமாள் மீது ஒரு தனிப்பட்ட மரியாதையுண்டு. முனுசாமியும் அன்புவும் பெருமாள் வீட்டை நெருங்க பள்ளியின் கந்தசாமி அண்ணன் அப்போதான் பெருமாள் வீட்டிலிருந்து மிதிவண்டியெடுத்துட்டு கிளம்பினார். கந்தசாமிதான் பள்ளியின் எடுபுடி. எல்லா வாத்தியாருக்கும். பசங்களுக்கு படு செல்லம். கந்தசாமி பெருமாளுக்கு ஏதோ விதத்தில் கடமைப் பட்டிருக்கிறார். அன்பு அவர் வீட்டிற்கு உள்ளே போனதும் பெருமாள் தன் இருகைகளையும் தன்பின் தலைமேட்டில் வைத்து அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தார். அதைப் பார்த்த அன்புவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை. அங்க என்னடானா வைத்தி கோவப்பட்டு வகுப்ப விட்டே ஓடுனாரு. இங்க என்னடானா இவரு இப்படி ஆடிபோய் உட்கார்ந்திருக்காரேனு குழப்பம். முனுசாமிக்கும் தெரியவில்லை. அன்பு மெதுவாகப் போய் பெருமாளிடம் கேட்டான். நாளைக்கு மாவட்ட கல்வி அலுவலர் வருகிறாராம். அதான் நீ கண்டிப்பா வரனும் சொன்னார் என்றார். அதற்கு ஏன் நீங்க அதிர்ந்துபோய் இருக்கனும்? கேட்டான் அன்பு. அவரிடம் என்னைப் பற்றி புகார் கொடுத்திருக்கிறார்கள். நான் ஆசிரியர் பணியைச் சரியாகச் செய்யவில்லையென்று. அதனால் அவர் என்னிடம் விசாரிக்க வேண்டுமாம். என்று மெதுவாகச் சொன்னார்.

அன்புவிற்கும் முனுசாமிக்கும் விளங்கவில்லை. அடுத்தநாள் ஆசிரியர்கள் அனைவருக்கும் மா.க.அ கூட எதோ கூட்டமென்று எல்லோரும் சென்று விட்டார்கள். வகுப்பறைக்கு எந்த ஆசிரியரும் வராததால் எல்லோடும் விளையாடச் சென்றிருந்தார்கள். ஆனால் அன்புவும் முனியும் அந்தக் கூட்டத்தை ரகசியமாகச் சென்று பார்த்தனர். வலது பக்கம் பெருமாள் வாத்தியார் நின்று கொண்டிருந்தார். இடது பக்கத்தில் வைத்தி நின்றுகொண்டிருந்தார். தலைமை ஆசிரியரும் கல்வி அலுவலரும் உட்கார்ந்து இருந்தார்கள். பெருமாள் வகுப்பின் வருகைப்பதிவேட்டைத்தான் இருவரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

பெருமாளைப் பார்த்து என்ன இது? ஏன் இப்படி எழுதியிருக்கிறீர்கள்? என்று கேட்டார் கல்வி அலுவலர். பெருமாளைப் பக்கத்தில் கூப்பிட்டு இப்படியா எழுதுவாங்க என்றார். அதில் மா.Anbalagan, சா.Barathy, வே.Baskaran என்று வரிசையாக எழுதப்பட்டிருந்தது. எதற்கு எப்படி எழுதினீர்கள் என்று கேட்கவே பெருமாள் சட்டென்று வைத்தியின் வருகைப் பதிவேட்டை நான் பார்க்கவேண்டும் என்றார். வைத்திக்கு மூக்குமேல் கோவம். நானெல்லாம் சரியாகத்தான் எழுதியிருக்கேன் என்று சத்தம் போட்டுக்கொண்டே தனது வருகைப்பதிவேட்டை எடுத்துக் கொடுத்தார். அதைப் பார்க்கத் தொடங்கினார் கல்வி அலுவலர். அதில் M.அருணகிரி, S.அருள்மொழி, என்று வரிசையாகப் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது. கல்வி அலுவலர் கண்ணாடியைக் கழட்டி பெருமாளைப் பார்த்தார். நான் போலாமா என்றார் பெருமாள். அவர் முகத்தில் ஈ ஆடவில்லை. நீங்க போங்க என்றார். வைத்தி எதுவும் புரியாமல் ஏன் அவரை அனுப்புறீங்க என்று சத்தம் போட்டார். இப்படி தப்பா எழுதி வைத்திருக்கும் அவரெல்லாம் எப்படி ஆசிரியராக இருக்க முடியும் என்று கல்வி அலுவலரைப் பார்த்துச் சத்தம் போட்டார் வைத்தி. ஓங்கி ஒர் அறை. அவன் ஆசிரியராக இருக்கவேண்டாம் என்றால் நீயும் ஆசிரியராக இருக்கக் கூடாது என்றார்.

கட்டிய வேட்டி கலையாமல் பெருமாள் செல்வதை கண்ணத்தில் கைவைத்துக் கடிந்துகொண்டான் வைத்தி.

(இக்கதையில் வரும் பெருமாள் வேறு யாரும் அல்ல என் அப்பாதான்)

3 comments :

Unknown said...

appo...ithu kathaiyalla...Nijam!
fine concept!

Unknown said...
This comment has been removed by a blog administrator.
குட்டிமணி செங்குட்டுவன் said...

நன்றி சகோ :)

Post a Comment