Saturday 11 October 2014

நாயின் புரட்சி !

2011 ஆம் ஆண்டு. செப்டம்பர் மாதம். ஐரோப்பிய கூட்டமைப்பை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்ற இக்கட்டான சூழலில், கூட்டமைப்பின் முடிவாக கிரேக்க நாட்டின் முதன்மைப் பிரதிநிதிகளோடு உலகலாவிய நாணய நிதியம் ( International Monetary Fund - IMF ) மற்றும் ஐரோப்பிய மைய வங்கி ( European Central Bank ) கூட்டு சேர்ந்து சில முடிவுகளெடுத்தன. அது அந்நாட்டு மக்களுக்கு விருப்பமில்லாத ஒரு முடிவாக அமையவே போராட்டங்கள் ஆங்காங்கே நடக்க ஆரம்பித்தன. அது ஒரு எழுச்சி மிகு போராட்டமாக அரசாங்கத்தை எதிர்த்த போராட்டமாக உருமாறி மக்கள் வீதிகளில் இறங்கினர். இதில் முக்கிய அம்சமாக விளங்கியதே அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய "லூகானிகாசு" ( Loukanikos ) என்ற நாய் தான். புரட்சி நாய் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டது. ஊடகங்களின் கவனத்தை வெகுவாய்க் கவர்ந்தவொன்று. 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அது இயற்கை மரணம் தழுவிதையடுத்து அதற்காக இந்தக் கட்டுரையை காணிக்கையாக்குகின்றேன்.

லூகானிகாசு என்ற நாய் போராட்டகாரர்களின் முன்பு
என்னடா இது நாயைப்பற்றியதொரு கட்டுரையா என நீங்கள் வியக்கலாம். ஆம் இது நாயைப் பற்றிய கதைதான். வீர நாயின் கதை. மனிதரை திட்டும் போது நாயே பேயே எனவெல்லாம் திட்டுவதுண்டு ஆனால் நாய் போல் ஒரு உயிரினம் நன்றி காட்டுவதுபோல் இந்தவுலகில் வேறு எந்த உயிரினமுமில்லை. கிரேக்க நாட்டு மக்களின் எழுச்சிக்கு இந்நாய் எப்படியெல்லாம் உதவியிருக்கிறது என்பதைக் கேட்டால் இப்படி மனிதர்களில்லையே எனத்தோன்றும். அந்த அளவிற்கு அந்தப்போராட்டத்தின் முன்வரிசையில் நின்று குரலெழுப்பி இருக்கிறது. 

அதுசரி நாயுக்கு எப்படி இவ்வளவு அறிவு என்கிறீர்களா? நாயே ஆனாலும் நல்லது எது கெட்டது எதுவென்று கூடவா தெறியாமல் போகும்? அல்லது நமக்கென்ன என எதிலும் அக்கறை இல்லாத மனிதமிருகமாக இருக்குமளவிற்கு அது ஒன்றும் நன்றிகெட்டதல்ல. மனிதர்கள் நலமாய் இருந்தால் தான் தாமும் நன்றாக இருக்க முடியுமென்ற இதன் எண்ணம் உண்மையில் பாராட்டுக்குறியது. உங்களுக்காக ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன் கேளுங்கள். 

செப்டம்பர் மாத அந்தப் போராட்டங்களின் போது ஏதன்சு நகரத்தின் மையப் பகுதியில் போராட்டக் காரர்களுக்கும் காவல்துறைக்கும் மோதல் வலுத்த போது இந்தநாய் அந்த இடத்தில் தான் இருந்தது. இருபுறத்தை நோக்கியும் கத்திக் கொண்டிருந்தது. ஏண்டா இப்படி அடித்துக்கொள்கிறீர்கள் என நினைத்திருக்குமோ என்னவோ தெறியவில்லை. ஆனால் சில மணி நேரங்களில் அது காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டு போராட்டக்காரர்களின் ஊடாகச் சேர்ந்து முன் வரிசையில் நின்று தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இது ஒரு முறை நடந்திருந்தால் விட்டுவிடலாம். ஆனால் தொடர்ந்து நடந்த அந்தப் போராட்டங்களிலெல்லாம் போராட்டக்காரர்களுக்காகவே அது ஆதரவாக இருந்துள்ளது வியப்பே. 

போராட்டக்காரர் ஒருவரோடு
புரட்சி செய்வதென்பது எல்லோராலும் முடியாது. சுயநலமும் தற்புகழ்ச்சி விரும்பிகளும் இதைச் செய்தலறிது. சமூகத்தின் மீதான அக்கறையும் மண்ணின் மீதான பாசமிருப்பவர்களே இதைச் செய்வார்கள்.அவர்களோடு கைகோர்த்து நின்ற இந்த பாசமிகு உயிரனத்தை விரும்பாதவர் எவர்தானிருப்பார் ? இப்படி மனிதர்களனைவரும் இருந்துவிட்டாலும் இது வாழும் போதே சொர்க்கம் தான். லூகானிகாசுவிற்கு எனது வீர வணக்கம்.



காவல்துறையை பார்த்து குலைக்கிறது



போராட்டக்காரர்களோடு








ஓய்வெடுக்கும் போது பின்னால் கிரேக்கக் கொடியுடன்


1 comment :

Unknown said...

நாய்க்குக்கூட தெரியுது சகோ.. ஆனா.... :(

Post a Comment