Wednesday 30 April 2014

முகுந்து வரதராசன் - உயிரல்ல வரலாறு!

முகுந்து வரதராசன் அவரது மனைவி மற்றும் மகளுடன்
காச்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட தமிழகத்தினைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர். தன் மண்ணுக்காக தன் இன்னுயிரை ஈந்த மாமனிதர். நமக்காகவெல்லாம் தான் இவர் தன் உயிரை துச்சமென மதித்து களம் கண்டவர். வாழ்க இவரது வீரம் வாழ்க இவரது புகழ்!!!

என பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் முகநூல்வாதிகளும் அயராமல் தங்களது அஞ்சலியை செலுத்தும் இவ்வேளையில் உங்களுள் எழாத ஒரு சில கேள்கள் என்னுள் எழவே செய்கிறது .


விலையில்லா இவ்வுயிர் மடிய என்னதான் காரணமென்ன?
இவர்தான் தொடக்கமா ?
இவர்தான் முடிவா ?
இவருக்கு முன்னால் கடந்த 60 ஆண்டுகளாக காச்மீர் எல்லையில் மடிந்தவர்கள் எத்தனை பேர் ?
யாருடன் எதிர்த்து இவர்கள் மடிந்தாரகள் ?
ஏன் இந்தியத்தின் எந்த மாநிலத்திலும் இல்லாமல் காச்மீரில் மட்டுமிவை நடக்கின்றது?
உண்மையில் சம்மு காச்மீர் ஒரு மாநிலமா?
இத்துனை கேள்விகளுக்கும் எத்துனை பேருக்கு பதில் தெறியும்?
அவர் இறந்ததும் நம் பங்கிற்கு ஒரு அஞ்சலியை பதிவிட்டு என்ன பயன் ?
வளர்ந்து வரும் இந்திய வல்லரசால் ஏன் இந்த உயிர்பலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை?

இதற்கான என்னுடைய பதில்களோ உங்களை கோபப்படச்செய்யலாம். ஆனால் அதுதான் உண்மை




முதலில் சம்மு காச்மீர் மாநிலம் எந்த மாநிலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்புகளைக் கொண்டது. இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் 370 வது பிரிவின் கீழ் இது சிறப்பு அந்தச்தும் வேறெந்த மாநிலத்திற்கும் இல்லாத அதிக மாநில சுயாட்சியும் பெற்ற மாநிலம். இராணுவம், தொலைத்தொடர்பு மற்றும் வெளியுறவுத் துறை தவிர மற்ற எல்லா துறைகளும் அதிகாரங்களும் அம்மாநிலத்திற்கே உண்டு. இவர்களுக்கென்று தனிக் கொடியும், தனி அர்சியல் சாசனமுங் கொண்டுள்ளனர் (1957ல் உருவாக்கப்பட்டது). அவர்களுக்கென்று தனிச் சட்டங்களும் உண்டு. இந்தியத்தின் மற்ற எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரும் அங்கு சொத்து வாங்குதல் முடியவே முடியாது. இங்குள்ள மாநில முதல்வரின் பதிவிக்காலம் 5 அல்ல 6 ஆண்டுகள்.

இப்படி இந்தியத்தின் எந்த சட்டத்திற்க்கும் விதிமுறைக்கும் உள்ளாகாமல் இருக்கும் இம்மாநிலம் எப்படி ஒரு இந்திய மாநிலமாக இருக்க முடியும்? தனி ஒரு நாட்டிற்கு உண்டான அனனத்து அம்சங்களும் கொண்ட இம்மாநிலம் எப்படி இந்தியத்தின் கீழ் உள்ளது ? உண்மையில் அதுவல்ல உண்மை. சீனாவாலும் பாக்கிச்தானாலும் இது இந்தியத்தின் மாநிலமல்ல, இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட காச்மீர். அது மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் சபையே காச்மீரை இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காச்மீர் என்றுதான் வரையறை செய்கிறது. இந்தியா மட்டும்தான் இதை இந்திய மாநிலமாகவே நினைத்துக்கொண்டுள்ளது.

இவ்வளவு காலமாக இங்கு நடைபெறுகின்ற அத்துனை சண்டைகளுக்கும் இந்தியாவும்தான் காரணம். இங்குள்ள மக்கள் எந்த நாட்டோடு சேரவேண்டும் அல்லது தனி நாடாக இருக்க வேண்டுமா என்ற ஐக்கிய நாடுகளின் சபையின் பொதுவாக்கெடுப்பின் பரிந்துரைக்கு இந்தியா முட்டாக உள்ளது. அது காச்மீரை தன்வசமே கொண்டிருக்க வேண்டுமென்றே நினைக்கிறது. போராடுகிறது. காச்மீர் நிம்மதியாக சர்ச்சைகளின்றி ஏதோ ஒரு நாட்டுடனோ அல்லது தனித்த நாடாகவோ இருக்க விரும்பவில்லை. இப்படி குழப்பங்களும் கொலைகளும் நீடித்தாலும் பரவாயில்லை ஆனால் காச்மீர் எனது நிர்வாகத்தின் கீழ்தான் இருந்தாக வேண்டும் என்ற இந்தியாவின் சுயநலம் இன்னும் எத்துனை முகுந்த் வரதராசன்களை காவு வாங்கப்போகிறது?

இவர்கள் யாரை தீவிரவாதி என்று சொல்கிறார்களோ அவர்கள் யாரென்றே தெறியாமல் இந்திய ராணுவம் குருட்டுத்தனமாக அவர்களை கொல்ல நினைப்பதும் வேதனைதான். முகுந்த் வரதராசன் தான் எதிர்த்து சண்டை போட்டது " ஹிச்புல் முசாகுதீன் (Hizb-ul-mujahideen) " என்ற அமைப்பு. அது காச்மீரிய விடுதலைக்காக போராடக்கூடிய அமைப்பு. எங்களுக்கு பாக்கிச்தானும் வேண்டா இந்தியாவும் வேண்டா எங்களுக்கென்று எல்லாம் உண்டு நாங்கள் தனியாகவே இருந்துவிடுகிறோம் என்று போராடுகிறார்கள். அவர்களை பிரிவினைவாதிகள் தீவிரவாதிகள் என்று பட்டஞ்சூட்டி அழித்தொழிக்கிறது இந்தியா. அவர்கள் பாக்கிச்தானிடம் உதவி கோருகிறார்கள் என்பதும் ஒரு விடயம். இது மட்டுமல்ல பஞ்சாப் மாநிலத்தில் காலிச்தான் என்ற தனிநாட்டிற்கான விடுதலைக்காக போராடியவர்களைத்தான் இந்திராகாந்தி பொற்கோயிலில் வைத்து கொன்றார். இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப் புலிகளையும் தீவிரவாத பட்டஞ்சூட்டி அழித்தொழித்தனர்.

சரி இந்தியத்திற்காக போராடி உயிர் நீத்த முகுந்த் வரதராசன் எத்துனை வீரத்திற்கும் மதிப்பிற்கும் உரியவராகிறாரோ அதேபோலத்தான் தனது மண் விடுதலைக்காக போராடி உயிர் நீத்தவர்களும். அவர்கள் புலிகளாகவும் இருக்கலாம் வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களையும் மதிப்பதுதான் உலக மாண்பு. முகுந்த் வரதராசன் எப்படி மதிக்கத்தக்க ஒரு உயிரோ அதேபோலத்தான் அவர் கொன்ற மனிதர்களும். இவரது தந்தையுந் தாயும் எப்படி மகனில்லை என்ற வேதனையும் மண்ணிற்காக உயிர் நீத்தான் என்ற பெருமையுமுண்டோ அதேபோலத்தான் அவர்களது தந்தையும் தாயும். தந்தையில்லாமல் வாடும் இக்குழந்தையும் அவர்களது குழந்தையும் ஒன்றைத்தான் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

"யாதும் ஊரே யாவருங் கேளிர் என்ற கூற்று காலத்தின் கட்டாயத்தில் மறைந்து இப்படி பெருஞ்சிக்கல்களில் வந்து நிற்கிறது. இவர்களே கடைசியாய் இருக்கட்டும். இனியும் உயிர்பலி ஒருபோதும் நிலையான மனித சமுதாயத்தை உருவாக்காது"

இம்மை துறந்து மறுமையில் வாழும் முகுந்த் வரதராசனும் அந்தச் சண்டையில் இறந்த பெயர் தெறியா மனிதவுயிர்களும் இவையனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் . .

No comments :

Post a Comment