Saturday 19 April 2014

இடிந்தகரைப் பயணமும் போராட்டமும் – 1000வது நாள் !!

நண்பர்களுடன். இடமிருந்து சிரிதரன், முத்துலிங்கம், நான் மற்றும் அருள். அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் தன் இன்னுயிரை ஈந்த தியாகிகளின் படத்தினருகில்.

அணு உலைக்கு எதிராக நடந்து வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மே மாதம் 11ம் தேதியில் தனது ஆயிரமாவது நாளை எட்டுகின்றது. பலதரப்பட்ட தடைகளையும், போராட்டாங்களையும், அடக்கும்முறைகளையும் தன்னகத்தே கொண்டு எல்லாவற்றிற்கும் மேலாக உயிர்த்தியாகமும் செய்து இன்னமும் முன்பிருந்ததை விட பன்மடங்கு வீரியத்துடனும் போராட்டம் எந்த வன்முறையையும் சந்திக்காமல் நேர்மை குன்றாமல் 1000 வது நாளை எட்டும் இத்தருணம் நாம் அனைவரும் உற்று நோக்கவேண்டியது கடமை.

பல வகையான அரசியல் சிக்கல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாகி இருக்கும் இந்த போராட்டத்திற்குத்தான் இன்றளவும் விடை இல்லை. இவர்களது இந்த அறவழியிலான போராட்டம் என்று முடியும் ? கூடங்குளம் அணு உலையில் மின்சாரம் சாத்தியம்தானா? இவர்கள் இரண்டு ஆண்டுகளாக எப்படி தொடர்ந்து போராட முடிகிறது? இதனால் இவர்கள் பெற்றதுதான் என்ன ? என்ற கேள்விகள் எனக்குள்ளும் வந்ததுதான். அதன் விளைவாக இடிந்தகரைக்கே செல்ல எனக்கொரு வாய்ப்பு அமைந்தது.




போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் அவர்கள் இடிந்தகரை மக்கள் முன்னால்

பெங்களூரில் இருந்து நானும் என் தோழர்களும் புனிதவெள்ளிக்கு ஒரு நாள் முன்னர் இந்த பயணத்தைத் தொடர்ந்தோம். ஒசூர் தர்மபுரி சேலம் கரூர் திண்டுக்கல் மதுரை திருநெல்வேலி வழியாக அடுத்தநாள் காலை நாகர்கோயில் சென்றோம். அங்கிருந்து வடசேரி அஞ்சுகிராமம் செட்டிகுளம் வழியாக கூடங்குளம் வந்தடைந்தோம். ஏறத்தாழ ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வந்திருந்தும் எந்த ஒருவித புவியியல் கலாச்சார மாறுபாடுகள் இன்றி சொந்த ஊரைப் போல அதே பனைகளும் தென்னைகளும் புதர்களும் கோவில்களும் ஏன் ஆங்கில சுவரொட்டிகளும் கூட சிறிதும் மாறாமல் அதேபோல். ஒன்றுதான் புதிது. நான் கொங்கு நாட்டை சொந்தமாய் கொண்டவனாதலால் நெல்லைப் பேச்சு புதிதுதான் ஆனாலும் அதன் வசீகரமும் வேகமும் தனியழகுதான். சில சமயங்களில் ஈழத்தமிழ் சாயல் வரும். கூர்ந்து கவனித்தால் தெறியும்.

இவ்வளவு இருந்தும் போகும் வழியேல்லாம் எனது கண்கள் தேடியது என்னவோ அணு உலையைத்தான். ஒருவழியாக தூரத்தில் மஞ்சள் நிறத்தில் தென்பட்டது. உன்னால் என்னை ஒன்றும் செய்துவிடமுடியாது என்ற ஏளனத்தோடு. விட்டிருந்தால் நாட்கணக்கில் பார்த்துக்கொண்டே இருந்திருப்பேன் அதன் பின்னுள்ள அத்தனை சதிகளும் அரசியல்களும் எதிர்காலத்தையும் மனவோட்டத்தில் ஓடவிட்டு.

கூடங்குளத்திலிருந்து இடிந்தகரைக்கு பேருந்து ஏதுமில்லாமல் செல்ல வேண்டியிருந்தது. எல்லாம் முடிந்து இடிந்தகரையை வந்தடைந்தபோது எதிரே இருந்தது போராட்டப்பந்தல்தான். ஏறத்தாழ எனக்குத் தெறிந்த அனைத்து சமூக ஆர்வலர்களும் மாணவ போராளிகளும் தமிழக அரசியல்வாதிகளும் வந்திருந்த பந்தல். கருணாநிதியும் செயலலிதாவையும் தவிர. அந்த கடற்கரை மணல் நான் நடக்கும் வேகத்தை குறைத்திருக்கலாம் ஆனால் என் எண்ணங்களை அல்ல. கீழே அமர்ந்து என்னோடு விளையாடு என்று கூப்பிடுவது போல் என் கால்களை தொடர்ந்து நெருடிக்கொண்டுதான் இருந்தன. எனக்கெல்லாம் பக்கத்து வீட்டுக்காரர் வீடு கட்டும்போது அதை வீதியில் கொட்டி வைத்திருப்பார். அப்போது விளையாடியது. எல்லாம் அப்போது நினைவில். தொலைக்காட்சியில் பார்த்த அதே மேடை அதே இடம் அதே பந்தல் அதே நாள் கணக்கேட்டுப்பலகை. அன்று புனித வெள்ளியானதால் கூட்டம் மட்டுந்தானில்லை.

ஒருவழியாக வந்து சேர்ந்துவிட்டோம். பிறகு அங்குள்ள மக்களிடம் பேசும் போதுதான் அதன் வீரியம் நான் நினைத்தைவிட பலமடங்கு அதிகமென்று. எனக்குத்தெறிய வந்தது. எந்தவொரு வீட்டிலுள்ள பெண்களும் அரசியலோ சமூக விழிப்புணர்வோ ஏதுமே இல்லாமல்தான் இருப்பார்கள். அவர்களுக்கு எந்தவொரு புரிதலும் இருந்திருக்க வாய்ப்பே இருக்காது. அதற்கு எனது அன்னையே சாட்சி. ஆனால் இவர்கள் இங்கிருந்துகொண்டே சென்னையையும் டெல்லியையும் ஏன் ரசியாவையும் விமர்சிக்கிறார்களென்றால் அது என்னை வியப்பில் ஆழ்த்தவே செய்தது. அவர்கள் இந்த அளவு விழிப்புணர்வோடு இருந்திருக்கக் காரணம் கண்டிப்பாக அண்ணன் #உதயகுமாரும் அவரது போராட்டத் தலைமையும்தான்.

தினமும் கூடங்குளம் தொடர்பாக வரும் அத்துனை செய்திகளும் பிரதி எடுக்கப்பட்டு அங்குள்ள அனைவருக்கும் சென்றிருக்கும். தினமும் மாலையில் அங்கு தங்களது ஆதரவைத்தர வந்திருக்கும் அனைவரையும் அந்த மக்களுக்கு அறிமுகம் செய்து அந்த மக்களோடு பேச வாய்ப்பும் ஏற்படுத்திக்கொடுக்கப்படுகிறது. அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளும் அரசியல்களும் ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் என அனைத்து தரப்பும் கூடிப் பகிர்ந்துகொள்ளக்கூடிய இந்த மாண்பு கண்டிப்பாக போற்றத்தக்கது. இப்படியே எல்லா ஊர்களும் இருந்துவிட்டால்? அதுசரி அதற்கு எத்துணை உதயகுமார்கள் உதிக்க வேண்டுமோ.

இவர்களுடன் இந்தப் போராட்டத்தில் இதுவரை உயிர்த்தியாகம் செய்தவர்கள் நான்கு பேர். அவர்களுக்கான அஞ்சலியும் தினமும் நடக்கிறது. அவர்களை தினமும் நினைவு கூர்ந்து போராட்டத்தை வேகப்படுத்துகிறார்கள். அவர்கள் அந்த நான்கு பேரை நினைவில் வைத்து எதையும் செய்யத்தயார் என்ற மனவுறுதிக்கு வந்துவிட்டனர். ஒவ்வொருவருடைய பேச்சிலும் அனல். ஒரு தீராத கோபம். வலி. வேதனை. விடிவு வரதா என்ற ஏக்கம். இவையெல்லாவற்றையும் தாண்டிய பொருமை. இவையெல்லாம் என்னை செருப்பால் அடித்து உரைக்கச் செய்தது ஒன்றைத்தான். நம் சமுதாயம் எவ்வளவு அறியாமையிலும் போதையிலும் இருக்கிறது என்பதை.



இவையனைத்தும் எனக்கு தொடர்ந்து ஈழத்தையும் அவர்களது ஆயுத போராட்டத்தையுமே நினைவுக்கு கொண்டுவருகிறது. நான்கு பேரின் உயிரை இவர்கள் எப்படி மதித்து துணிந்து களத்தில் நிற்கிறார்களோ அதே புனிதம் தான் புலிகளிடமும். புலிகளின் போராட்டமும் தியாகமும் எவ்வளவு புனிதமானதோ அதே அளவு புனிதமானது இடிந்தகரைப் போராட்டமும். ஆனால் இன்றுவரை இவர்களுக்கான பதில்தான் என்னவென்றே தெறியாமல் ஆயிரமாவது நாளை தொட்டிருக்கிறார்கள். இவர்களுடைய போராட்டம் வெற்றிபெற வேண்டுமென்றால் நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். அனைத்து துறைகளிலும் நாம் இருக்க வேண்டும். நீதித்துறை அணுத்துறை ஊடகத்துறை காவல் அரசியல் ஆட்சித்துறை எல்லாமும். இன்று அரசியலில் காலடி வைத்தாகிவிட்டது. மற்ற துறைகளில் ? அடுத்த தலைமுறையாவது நம்மைப்போல் பிச்சை எடுக்காமல் அவர்கள் தங்களுக்கு வேண்டிய முடிவை எடுக்க வழிகோலுவோம்.

இடிந்தகரைப் போராட்டகளம் எல்லோரும் செல்லவேண்டிய ஒன்று. கீழே உள்ள எனது படம் அணு உலையையும் தாங்கி நிற்கிறது. இனி இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டுமென்றால் அது இன்று போல் என்றும் செங்கல் கூடாகவே இருத்தல் வேண்டும்.

அங்குள்ள அலைகளின் சத்தம் என்றும் ஓயப்போவதில்லை. ஆனால் அதைக்காண வேண்டுமென்றால் நாம் ஓய்ந்துவிடக்கூடாது. தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம். களத்தில் உள்ளவர்களுக்கு எனது அன்பும் ஆருதலும் என்றும்.

இடிந்தகரை சென்றதன் நினைவாக எடுக்கப்பட்டது. பின்னால் தொலைவில் தெறிகின்றது கூடங்குளம் அணு உலை.

No comments :

Post a Comment