Saturday 5 October 2013

கற்றுக்கொண்ட பாடங்கள்

முகநூலில் கடந்த சில நாட்களாய் சனநாயக நாடகாக இருந்தாலும் ராசா ராணியைப் போற்றித்தள்ளுகிறார்கள். அப்படி எந்த ராசா ராணி என்று உள்ளம் கேட்கலாம். ஆமாம் அதே ராசா ராணிதான்.

ஒரு லிட்டர் தண்ணீரை 20 ரூபாய்க்கு குடிக்கும் இவர்கள் அதே 20 க்கோ அல்லது 15 க்கோ ஒரு இளநீர் வாங்கிக் குடிக்காத கூட்டம். இவர்கள் போற்றித்தள்ளுகிறார்கள் என்றால் நான் கொஞ்சம் கவனமாயிருந்திருக்கலாம். ம்ம் அது ஒருபுறம் இருக்கட்டும். இன்று நான் சொல்ல நினைத்ததென்னவோ கற்றுக்கொண்டதைப்பற்றி கற்றுக்கொள்ள வேண்டியதைப் பற்றி.

கடந்த ஒரு வருடத்திற்கு மேல் நான் பெங்களூரில் வசித்து வருகிறேன். ஏதோ என் சொந்த ஊரில் கொஞ்ச கன்னடரும், கொஞ்ச தெலுங்கரும், நிறைய வடநாட்டவரும் இருப்பது போலத்தான் தோன்றும். இன்னும் சொல்லப்போனால் கர்நாடக மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதி தமிழ் மக்கள் தாம். அதாவது மொத்த ஐந்தரைக் கோடியில் ஒரு கோடிக்கும் மேலாக தமிழ் மக்கள்தான். ஆனால் தொகையில் குறைவாக உள்ள கேரள மக்களில் இருந்து மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் ஒரு தமிழர் கூடக்கிடையாது.


ஏனென்றால் தமிழர்களாகிய நம்மிடம் ஒற்றுமை என்பது அறவே கிடையாது. அதற்காகத்தான் இந்தப்பதிவு. கடந்த 2009 ம் ஆண்டு ஈழப்போர் முடிவுற்று இனப்படுகொலையெல்லாம் உலகறிந்த பின்னர் இலங்கை மகிந்த அரசாங்கம் அவர்களே அவர்களை விசாரிப்பதாகக் கூறி LLRC (Lessons Learnt and Reconciliation Commission ) அதாவது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் படிப்பினைகள் என்றதொரு குழுவை அமைத்தனர். அந்தக் குழு சொன்ன அறிக்கை தவறாக ஒரு புறமிருந்தாலும், ஈழபோரிலிருந்து கற்றுக்கொண்டது சிங்களவன் மட்டுமல்ல தமிழனாகிய நாமும்தான். அது சொல்லிக்கொடுத்த ஒரே பாடம் ஒற்றுமை என்றதோர் ஒற்றைச் சொல்.

அதை நான் இங்கு பெங்களூரில் தெளிவாகக் காணமுடிந்தது. கீழே கொடுத்துள்ள படமானது கர்நாடகத்தின் கொடி. கர்நாடகத்திற்கான கொடி. 1960 களில் இது ஒரு கச்சிக்கொடியாகத்தான் ஆரம்பிக்கப்பட்டு பிறகு எல்லா மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று எல்லா அரசு அலுவலகங்களிலும் இந்தியக் கொடியுடன் இதுவும் ஏற்றப்பட்டிருக்கும். எல்லா மூன்று சக்கர ஆட்டோக்களிலும் இக்கொடியிருக்கும். பெங்களூரில் வசிப்பவர்களுக்கு இதை எளிதில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். முக்கியமாக காவிரி பிரச்சனைகளின் போது கட்சி வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் இந்தக்கொடியைத்தான் ஏந்தி தமிழர்களுக்கெதிரான முழக்கமே இருக்கும். கர்நாடகத்திற்கான ஒரு முக்கிய அடையாளமாக விளங்கி நிற்கிறது. ஆனால் நாம் இன்றும் விளங்காமலே நிற்கிறோம்.

கன்னடர்களின் கொடி
எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவரானாலும் இந்த மஞ்ச-சிவப்பு நிறத்திற்கு கீழே ஒன்றுபட்டு நிற்கின்றனர். நமக்கென எந்தவொரு தனி அடையாளத்தையும் நாம் ஏற்படுத்தியதுமில்லை ஏற்றுக்கொண்டதுமில்லை. ஆக சிங்களவன் கற்றுகொண்டானா இல்லையா என்பதை விட்டுவிட்டு நாம் என்ன கற்றுக்கொண்டோம் எனக் கேட்டுக்கொள்வது நல்லது.

எப்படி ஒன்றினைவோம் எவ்வாறு ஒன்றினைவோம் ? உங்கள் எண்ணத்திற்கே விட்டுவிடுகிறேன்.

No comments :

Post a Comment