Saturday 1 July 2017

நூறு ரூபாய் பயணம் | பெங்களூர் முதல் கோபி வரை

பெலந்தூர் ரோட் நிறுத்ததில் நான்
படித்தோம் முடித்தோம் வேலை கிடச்சுது. இப்படித்தான் என் வாழ்க்கையும். 2012ல் பொறியியல் படிப்பு முடிக்கவும் வேலை கிடைக்கவும் சரியாக இருந்தது. கல்லூரி முடித்த கையோடு பெங்களூர் போய் வேலையில் சேந்தாச்சு. கைநிறைய சம்பளம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இருக்க உண்ண போகவர இதுக்கே அவ்வளவும் சரியாக இருக்கும்.

நான் வேலை செய்த நிறுவனத்தில் இரு நேர பணியாகப் பிரித்து வைத்திருப்பார்கள். காலை ஆறு முதல் மாலை மூன்று வரை. அடுத்து மாலை மூன்று முதல் இரவு பன்னிரண்டு வரை. தொடர்ந்து இரண்டு வாரங்கள் ஒரே நேரத்தை கடை பிடிக்கனும். ஆக எப்போதெல்லாம் காலை நேர வேலைக்குப் போகிறோமோ அப்பொழுதெல்லாம் வார இறுதி நாட்களில் ஊருக்குப் போவது மிக எளிது. அதும் நூறு ரூபாயில். கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்குமே. ஆனால் அந்த மூன்று ஆண்டுகளின் அனுபவத்தைப் பற்றியதுதான் இக்கட்டுரை.

வேலைக்குப் போய்ச் சேர்ந்தது முதலே ஊருக்கு போகவேண்டுமென்றால் கொஞ்சமல்ல மிகக்கடியான ஒரு விசயந்தான். ஏனென்றால் நான் தங்கி இருப்பது குந்தனகள்ளி. பெங்களூரின் கிழக்கு. மடிவாலாவில் இருந்து 18கி.மீ. அதும் தனியார் பேருந்தெல்லாம் பதிவு செய்தால் இரவு 10 மணிக்கு மேலதான் எல்லாமே. விடியற்காலைல போய் ஊர் சேருவதுபோல் இருக்கும். நானிருக்கும் இடத்திலிருந்து மெஜெஸ்டிக்கோ அல்லது சாட்டிலைட்டோ இல்ல சில்க் போர்டோ ரொம்பத் தொலைவு. அவசர அவசரமாக வளர்ந்த ஊராச்சே. பின்ன அப்படித்தான் இருக்கும் என்பதுதான் இந்த நெருக்கடிகளுக்கெல்லாம் பதில்.

ஆனால் என் கூட வேலை செய்தவர்கள் எல்லோரும் பசங்கதான். தனி வருத்தம் இருந்தாலும் அது ஒருவகையான சந்தோசந்தான். மூன்றுக்கு வேலை முடிஞ்சுதுனா ஐந்து மணிக்கு அந்த தொடர்வண்டிய புடிக்கத்தான் பறப்போம். ஏன்னா நூறு ரூபாய்க்கே வீட்டுக்கு போகனும்னா ஒரு சில நேரங்களை கடபுடுச்சுத்தான் ஆகனும். மாலை ஐந்து மணிக்குத்தான் பெலந்தூர் நிறுத்தத்திற்கு வரும். மணி நாலுக்கு எல்லாம் நடக்க ஆரம்பிச்சாத்தான் போய்ச் சேர முடியும். அது தண்டவாளத்திலேயே நடக்கனும். ஆனால் பேசிக்கொண்டே நடந்துவிடுவோம். சேர்ந்த பின்பு சீட்டு வாங்கனும். அதும் நாற்பது ரூபாய் தான். சேலம் வரைக்கும். எவ்ளோ குறைவு பாத்தீர்களா! இந்தியன் ரயில்வே வாழ்க தான். தனியாருக்குத் தாரை வார்க்காமல் இருக்கும் வரை. \

சேலம் என்று கூட சொல்ல முடியாது. ஓமலூர் வரை. 15கி.மீ சேலத்திற்கு முந்தைய நிறுத்தம். இறங்கி ஓமலூரில் நல்லா பரோட்டா தோசை என ஒரு விலாசு விலாசிவிட்டு ஏழு ரூபாய் கொடுத்தால் சேலம் பேருந்து நிலையத்திற்கு வந்து விடலாம். அங்கிருந்து எல்லா ஊர்களுக்கும் தொடர்பு உண்டு. ஈரோட்டிற்கு முப்பது ரூபாய் ஆகும். பத்து மணிக்கு சேலத்தில் புறப்பட்டால் 11.30க்கு ஈரோடே போய்ச்சேர்ந்து விடலாம். அங்கிருந்து மைசூரு வண்டியில் கோபிக்கு போனால் முப்பது நிமிடம் இருபது ரூபாய். சாதாரண வண்டியில் போனால் பதினைந்து ரூபாய் முக்கால் மணி நேரம். அவ்ளோதான். ஆக மொத்தம் கூட்டிக கழித்துப் பார்த்தால் எட்டு மணி நேர பயணம் அதுவும் வெறும் நூறு ரூபாயில் என்பது அட்டகாசம் இல்லியா?

இதில் ரொம்ப சுவாரசியமான நிகழ்வுகள் நிறைய நடக்கும். என்னவென்றால் நான் தங்கி இருக்கும் அறையில் இருந்து அந்த தொடர்வண்டி நிறுத்தம் ஒரு 3கிமீ தொலைவுதான் இருக்கும். அதற்கு வண்டியில் போனால் போய்ச்சேரவே முடியாது. நடராசாவேதான். போகும் போது நானும் நிறைய பேர் கிட்ட கொஞ்ச தூரம் போக உதவி கேப்பேன். முக்கியமா இந்த IT ல வேலை செய்கிறவர்கள் உதவவே மாட்டார்கள். அழுக்கு உடையுடன் கூலி வேலைக்கு போவார்களே அவர்கள் தான் என்றுமே உதவியிருக்கிறார்கள். கன்னடத்தில் பேச முயற்சிப்பேன் ஆனால் அவர்களே நான் தமிழ் என்று தெரிந்து கொண்டு தமிழில் பேசிவிடுவார்கள். 

இதெல்லாம் போக ரயிலில் போகும் போதுதான் இந்தியாவின் அடித்தட்டு மக்களையே பார்க்க முடியும். 10ரூபாய் காரப்பொரியும் நாலு வடை பத்தும் தான் என்னோட பயணத்தின் கண்டிப்பான கொரித்தல்கள். இதெல்லாம் போக தர்மபுரி தாண்டியதும் மொத்த கூட்டத்தின் முக்கால்வாசி இறங்கிவிடும். ஏனென்றால் இவர்கள் எல்லாம் தினசரி ஒசூரோ அல்லது பெங்களூரோ சென்று வேலை செய்பவர்கள். பிறகு என்ன மேற்படுக்கையில் போய் மல்லாக்க படுத்துவிட வேண்டியதுதான். 

ஒன்பது மணி சுமாருக்கு ஓமலூர் சென்றடைவோம். பிறகு 12மணி வரை பசிய தாக்கு புடிக்கனுமே அதனால் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு கிளம்ப வேண்டியது தான். ஓமலூரில் இருந்து சேலம் 15 கிமீ. அங்கிருந்து சேலம் பேருந்து நிலையம் போயும் ஈரோடுக்கு வண்டிய புடிக்கலாம். இல்லயேல் ஓமலூரில் இருந்து நேரே தாரமங்கலம் வழியே சங்ககிரிக்கும் போகலாம். ஓமலூரில் இருந்து சேலம் போகும் முன்னரே சங்ககிரி போயிடலாம். ஏன்னா சேலம் பெரிய ஊராச்சே. உள்ளபோயிட்டு வெளிய வர நேரமாகும். சங்ககிரிக்கு நேரே போனால் அங்கேயும் ஈரோட்டுக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு வண்டி இருக்கும். சேலம் முதல் ஈரோடு திருப்பூர் கோவை செல்லுல் பாதிக்கும் மேல் சங்ககிரி போய்தான் போகும். ஈரோட்டுப் போனால் அங்கிருந்து கோபிக்கு இரவு ஒரு மணிவரை வண்டி இருக்கும். 

மொத்தத்தில் ஏறத்தாழ ஒருமணி சுமாருக்கு கோபிசெட்டிபாளையமே வந்துடுவேன். பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து போகிற தூரம் தான். கரும் புகை கக்கும்  வாகனங்கள் இல்லாத அந்த நடுநிசியில் தனியாக நடந்து செல்வது கூட ஒருசுகம் தான் இல்ல. அது பெங்களூர் இல்லையே இருந்தாலும் கடந்த பத்து வருடங்களில் கோபி வளர்ந்த வளர்ச்சி அளப்பரியது. எல்லோரும் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டனர். பள்ளிகள் பெருகிவிட்டன. தனியார் பள்ளிகள். ராயல் என்பீல்ட் முதல் இயற்கை அங்காடிகள் வரை கொடி நாட்ட ஆரம்பித்து விட்டார்கள். ஈரோடு சத்தி முக்கிய சாலைதான் கோபியின் ஆணிவேராகிவிட்டது. கிழக்கும் மேற்காக கோபியின் வளர்ச்சி அந்த ரோட்டிலேயே வளர்ந்துவிட்டது. சொல்லப்போனால் குருகுலம் பள்ளியில் "கிண்டர் கார்டன்" சேர்க்கைக்கே நாற்பது ஆயிரம். பெங்களூர கணக்கால்ல ஏகிருடுச்சு, வறட்சியே காணாத கோபி சுத்து வட்டாரங்கள் இன்று ஒரு லாரி தண்ணீர் 700ரூபாய்க்கு வாங்கி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள். எல்லாம் நம் ஆட்டம். இனி பவானி -ஆற்றுப் பாசனம் எப்போ பொய்க்கப் போகிறதோ ம்ம்ம !!

அத வுடுங்க நம்ம கதைக்கு வருவோம். இந்த மாதிரியான பெரும் பொருட்செலவில்லாமல் நம்மால் 250 கிமீ பயணம் செய்ய முடியுமென்றால் அது இரயில்வே துறை அரசாங்கத்திடம் இருப்பதால் தான். இதே கோபிக்கு பெங்களூரில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து வந்து பாருங்கள் தெரியும். குறைந்த்து 550ரூபாய். அதுவும் திருவிழாக் காலங்களில் 900 / 1000 என பறக்கும். எல்லாமே தனியார்மய தாராளமயமாக்கப் படும் இந்நாட்டில் அடுத்து பத்து வருடங்களில் இப்படி ஒன்று இல்லாமலே போகலாம். அப்போது எடுத்து இந்தப் பயணப் பதிவை படித்துப் பாருங்கள். அருமை புரியும். 

4 comments :

Unknown said...

Super anna... eludhirukaradhu nala iruku

Unknown said...

மிக அருமையான பதிவு.

Unknown said...

Ha ha ..super

Unknown said...

Anna y feeling same feeling...apdi travel panra sugame thani than

Post a Comment